கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சிவராம பெருமாள். அப்பகுதியில் மருத்துவமனை அமைத்து பணியாற்றி வருகிரார். இவர் தி.மு.க மருத்துவர் அணி மாவட்ட துணை அமைப்பாளராகவும் உள்ளார். இவரது மனைவி சீதா அரசு மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஜூலை 12ஆம் தேதி கொரோனா தொடர்பான பணிக்குச் சென்று திரும்பிய மனைவி டாக்டர் சீதாவை தனது காரில் வீட்டிற்கு அழைத்து வரும்போது, வழியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் சிவராம பெருமாளின் வாகனத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளார். காரில் இருந்து இறங்கிச் சென்ற டாக்டர் சிவராமப் பெருமாள், அரசு மருத்துவமனையில் கோவிட் பணி முடிந்து டாக்டரான தனது மனைவியை அழைத்து வருவதாக ஆங்கிலத்தில் பதில் கூறி உள்ளார்.
ஆங்கிலத்தில் தான் பேசுவாயா? தமிழில் பேச மாட்டாயா ? என ஒருமையில் பேசி அவமானப்படுத்தி உள்ளார் டி.எஸ்.பி. பாஸ்கரன். அப்போது டி.எஸ்.பி. பாஸ்கரன், டாக்டர் சிவராம பெருமாளையும் அவரது மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. பொது இடத்தில் பலர் முன்னிலையில் தன்னையும் மனைவியையும் அவமானமாகப் பேசியதால் சிவராம பெருமாள் துயரத்தோடு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அன்றிலிருந்து அவ்வப்போது பாஸ்கரன், சிவராம பெருமாளை தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சிவராம பெருமாள் மனச்சோர்வுடன் காணப்பட்ட நிலையில், தன்னை மிரட்டிய துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தான், தனது மரணத்துக்கு காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
மருத்துவரின் தற்கொலைக்கு காரணமான டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசியுள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட மருத்துவர் சிவராம பெருமாள் தற்கொலை செய்யும் முன்பு உறவினர் ஒருவருடன் செல்போனில் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் டி.எஸ்.பி தனது தற்கொலைக்கு காரணம் எனவும் தனது மகளிடம் உலகில் யாரையும் நம்ப வேண்டாம் எனவும் கூறியுள்ள அந்த வார்த்தைகள் கேட்போர் மனதை உருகச் செய்யும் வகையில் உள்ளது.