கொரோனா தொற்றுக்கு ஆளான தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் தீவிர மூச்சுத்திணறல் காரணமாக, அமைச்சர் துரைகண்ணு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில், ஒன்றுக்கு மேற்பட்ட இணைநோய்கள் உள்ளதாகவும், சமீபத்திய சிடி ஸ்கேன் படத்தில் அவரது நுரையீரலில் 90 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று அவருக்கு எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அமைச்சர் துரைக்கண்ணு இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் துரைகண்ணுவின் உடல்நலன் குறித்து நேரில் சென்று விசாரித்தனர். இந்நிலையில், அமைச்சர் துரைக்கண்ணு முழு நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும் என விரும்புகிறேன் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, இன்று (26-10-2020) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியில், “கோவிட்-19-ஆல் பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு ‘எக்மோ கருவி’ மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவது அறிந்து அதிர்ச்சி அடைகிறேன்.
அமைச்சர் அவர்கள் முழு நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும் என விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.