மத்தியில் ஆட்சியில் இருக்கக் கூடிய பாஜக அரசு கொண்டு வரும் அனைத்து மக்கள் விரோத சட்டங்களுக்கும் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் கண்ணை மூடிக்கொண்டு ஆமோதித்து வருகிறது தமிழகத்தில் உள்ள எடப்பாடியின் அதிமுக அரசு.
அந்த வகையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை பரபரப்புகளுக்கு இடையே வேளாண் சட்டங்களில் மாற்றங்களை கொண்டு வந்து அதனை நிறைவேற்றியதோடு பாஜக அரசு குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற்றிருக்கிறது. இதற்கு அதிமுக அரசு முழு ஆதரவையும் அளித்திருக்கிறது.
தான் ஒரு விவசாயி என செல்லும் இடமெல்லாம் பறை சாற்றிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் இந்த புதிய வேளாண் சட்டத்தினால் ஏற்படவிருக்கும் அழிவுகளை எண்ணிப்பார்க்க முடியவில்லை என கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுச்சிமிகு போராட்டத்தையும் நடத்தினார். இருப்பினும் பதவியை காப்பாற்றுவதற்காக மக்கள் விரோத சட்டங்களுக்கு பூரண ஆதரவை எடப்பாடி பழனிசாமி அளித்து வருகிறார் என குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தல் பணிக்காக திருநெல்வேலிக்கு வந்திருந்த அகில இந்திய காங்கிரஸின் செயலாளர் சஞ்சய் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை முனைப்புடன் செயல்படுத்தி வரும் பாஜகவின் தலையாட்டு பொம்மையாக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது என குற்றஞ்சாட்டினார்.
மேலும் விவசாயிகளின் தலைவன் என்றும், இது விவசாயியின் ஆட்சி என்றும் கூறி வரும் முதலமைச்சர் பழனிசாமி ஏன் புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவை தெரிவித்துள்ளார் என கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக திமுகவும் காங்கிரஸும் வீரநடைப் போடும் எனவும் சஞ்சய்தத் கூறியுள்ளார்.