மதுரையைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான எம்.பூரணசுந்தரி சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 286-வது இடம் பெற்றார். இவருக்கு ஐ.ஏ.எஸ் பணியிடம் ஒதுக்கப்படாமல் ஐ.ஆர்.எஸ் (இந்திய வருவாய்ப் பணி) பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தனக்கு ஐ.ஏ.எஸ் பணியிடம் ஒதுக்கக் கோரி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் பூர்ணசுந்தரி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மத்திய நிர்வாகத் தீர்ப்பாயக் கிளை, மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியல் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில், பூரணசுந்தரிக்கு ஓ.பி.சி பிரிவின் அடிப்படையிலும் மாற்றுத்திறனாளிக்குரிய பணியிடத்தின் அடிப்படையிலும் ஐ.ஏ.எஸ். பணியை வழங்காமல் ஐ.ஆர்.எஸ். பணி வழங்கப்பட்டிருப்பது, இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “குடிமைப் பணித் தேர்வில், தனது அயராத முயற்சியால் வெற்றி பெற்ற மதுரையைச் சேர்ந்த செல்வி. பூரணசுந்தரி அவர்களுக்கு ஓ.பி.சி பிரிவின் அடிப்படையிலும் மாற்றுத்திறனாளிக்குரிய பணியிடத்தின் அடிப்படையிலும் ஐ.ஏ.எஸ். பணியை வழங்காமல் ஐ.ஆர்.எஸ். பணி வழங்கப்பட்டிருப்பது, இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது. இதுகுறித்து அவர் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ளார்.
ஏற்கனவே கேரள மாநில கேடரில் பார்வைத்திறன் குறைந்த மாற்றுத் திறனாளி பெண்மணிக்கு ஐ.ஏ.எஸ். பணி வழங்கப்பட்டிருப்பதன் அடிப்படையில் பூரணசுந்தரி அவர்களுக்கும் ஐ.ஏ.ஸ். பணி வழங்கிட மத்திய அரசை வலியுறுத்துகிறேன். பூரணசுந்தரி அவர்களின் முயற்சிகளுக்கு தி.மு.கழகம் துணை நிற்கும்!” எனத் தெரிவித்துள்ளார்.