அரசு மற்றும் தனியார் நிலங்களில் உரிய அனுமதியின்றி கட்டிட பணிகள் மேற்கொள்வதை தடுக்க, அந்த கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் வழங்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் 2018ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக, கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளுக்கு, கட்டிட பணிகள் முடிப்பு சான்றிதழை கட்டாயமாக்கி, 2018ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையின் அடிப்படையில், புதிய கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெற கட்டிட பணி முடிப்பு சான்றை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்த, கள அதிகாரிகளுக்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடந்த ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவு பிறப்பித்து சில மாதங்கள் கடந்த நிலையில், அதை திரும்பப் பெற்று, கடந்த 6ம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக விநியோக இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி, கோவை நுகர்வோர் அமைப்பு சார்பில் அதன் செயலாளர் கதிர்மதியோன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், சட்டவிரோத கட்டுமானங்களை தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மீறி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இந்த ஆணையை பிறப்பித்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்டிட பணி முடிப்பு சான்று கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெற்ற ஆணையை ரத்து செய்து, புதிய இணைப்புக்கு கட்டிட பணி முடிப்பு சான்று கட்டாயம் என்ற உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மின் இணைப்பு பெற கட்டுமான பணி முடிப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவை, எந்த காரணமும் இல்லாமல் திரும்பப் பெற்றுள்ளதாகவும், இந்த உத்தரவு சட்டவிரோத கட்டுமானங்களை கட்டுப்படுத்தும் சட்டவிதிகளின் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, புதிய மின் இணைப்புகளுக்கு கட்டிட பணி முடிப்பு சான்று கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெற்ற ஆணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.