அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது அதிகாரிகள் சொத்துக்களை குவிக்கின்றனர். பதிவுத்துறையின் பணிகள் பெரும்பாலும் மேஜையில் நடக்கின்றன என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அடுக்கடுக்கான அதிருப்திகளையும், கண்டனங்களையும் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் உள்ள அரசு துறை அலுவலகங்களில் அதிக அளவில் லஞ்சம் பெற்றுக்கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது இல்லை எனவும் மணல் மற்றும் கனிம வளக் கொள்ளையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பரவலாக குற்றச்சாட்டு உள்ளது .
இது தொடர்பான பல்வேறு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் ஆகும் போது அதிகாரிகள் அதிக அளவில் லஞ்சம் பெறுவதாகும், இதனை தடுத்து நிறுத்தவும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது.
இந்த நிலையில் கரூர் மாவட்டம் மண்மங்கலம் சேர்ந்த செந்தில் நிலத்தின் சர்வே எண் தொடர்பான பிரச்சினையை தீர்க்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் மண்மங்கலம் தாசில்தார், தாந்தோணி பிடிஓவிடம் அறிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் பிடிஓ எந்த மேல் நடவடிக்கையும் எடுக்காதது தெரிய வருகிறது. அவர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
வருவாய் துறையில் அதிக அளவில் லஞ்சம் உள்ளதாகவும் குறிப்பாக தாசில்தார், சர்வேயர், டிஆர்டிஓ உள்ளிட்டோர் அதிக அளவு ஆவணங்கள் தொடர்பான பணிகளில் ஈடுபடுகின்றனர். அதிக அளவு சொத்துக்களைச் சேர்க்கின்றனர். மேலும் பல மாவட்ட பதிவாளர்கள் சார்பதிவாளர்கள் மற்றும் பதிவுத் துறை ஊழியர்கள் இது போன்ற வழிகளை பின்பற்றுகின்றனர்.
இங்கு பெரும்பாலான நடவடிக்கைகள் மேஜைக்கு கீழே தான் நடக்கின்றன. இதனால்தான் பதிவு தொடர்பான நடவடிக்கைகள் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. பதிவு துறையினர் லஞ்சம் வாங்க பத்திர எழுத்தர்கள் ஏஜெண்டுகளாக செயல்படுகின்றனர்.
இந்த நிலை பல துறைகளிலும் உள்ளது இவர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. வருவாய்த்துறையினருக்கும், பதிவுத்துறையினருக்கும் செம போட்டி உள்ளது. எனவே நவம்பர் 10ஆம் தேதி 2018 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிய வீடியோவின் பெயர், அவரது ஆதார் எண், செல்போன் எண் போன்ற விபரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.