சென்னை, கோட்டை, அன்னை சத்யா நகர் அருகே, நேற்று முன்தினம் கஞ்சா விற்பதாக கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து கோட்டை போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
அதனையடுத்து, அந்தச் சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் குமார், (38) என்பவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து இங்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
மேலும் ஆட்டோ டிரைவர் குமாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வேப்பேரியில் தங்கி ஆயுதக்காவல் படையில் வேலை பார்த்து வந்த காவலர் அருண்பிரசாத் (29) என்பவர் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. பின்னர் காவலர் அருண் பிரசாத் வீட்டில் நடத்திய சோதனையில், ஒன்றரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் விசாரணையில், அந்த கஞ்சாவை அவர் விற்பனை செய்வதற்கும், தன் உபயோகத்திற்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கஞ்சா விற்பனை வழக்கில் மூன்று பேரையும் கோட்டை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 3 கிலோ கஞ்சா மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.