திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல்மணம்பேடு கிராமத்தில், 14 வயது சிறுமியிடம் 500 ரூபாய் பணத்தை காண்பித்து பாலியலில் ஈடுபட முயன்றதாக பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் அலமாதி வரையிலான உயர் அழுத்த மின்கம்பி அமைக்கும் சிறப்பு பிரிவில் மின்சார வாரியத்தில், உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வரும் சுரேஷ் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் சொந்த வீட்டில் வசித்து வந்ததாகவும், பணி காரணமாக மேல்மணம்பேடு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து அடிக்கடி அங்கு வந்து தங்கியதும் தெரியவந்தது.
மேலும், நேற்று மாலை குடிபோதையில் அவர் குடியிருக்கும் வீட்டின் அருகே 14 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது கையில், 500 ரூபாயை காண்பித்து பாலியலில் ஈடுபட அழைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரைக் கைது செய்த வெள்ளவேடு காவல்துறையினர் 14 வயது சிறுமியை பாலியலில் ஈடுபட அழைத்த குற்றத்திற்காக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுரேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
அதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி பரணிதரன் வழக்கை விசாரித்து 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து சுரேஷ் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.