பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், காய்கறி கடைகள், மளிகை கடைகள், உணவகங்கள், தேநீர் கடைகள், வணிக வளாகங்களில் உள்ள கடைகள் இரவு 10 மணி வரை திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பண்டிகை காலம் நெருங்கி வருவதால், பொது இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றுதல், கூட்டம் கூடுவது ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். மேலும், மக்கள் முககவசம் அணிவதுடன், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வழக்கமான, நடைமுறையே தொடரும் என்றும், மற்ற இடங்களில் திரையரங்குகள் தவிர மற்ற வணிக வளாகங்களை திறக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தற்போது கடைகள் இரவு 9 மணிவரை மட்டுமே திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விழாக்காலத்தை கருத்தில் கொண்டு கடைகளுக்கு கூடுதல் நேரம் அனுமதியளித்துள்ளது தமிழக அரசு.