நீலகிரி மாவட்ட ஆட்சியரைத் தொடர்ந்து, குமரி மாவட்ட ஆட்சியர் பெயரிலும் போலியான மின்னஞ்சல் உருவாக்கப்பட்டு அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே, மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளிடம் துறை ரீதியாக விளக்கம் கேட்பதற்காக தனது அலுவலக மின்னஞ்சல் முகவரியில் இருந்து மின்னஞ்சல் அனுப்புவது வழக்கம்.
கடந்த சில நாட்களாக அரசுஅதிகாரிகளுக்கு துறை ரீதியாக சில தகவல்கள் கேட்டு ஆட்சியரின் மின்னஞ்சல் போன்ற, மற்றொரு மின்னஞ்சல் முகவரியிலிருந்து மெயில் வந்துள்ளது. மாவட்ட ஆட்சியர்தான் வேறொரு மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதாக நினைத்து, சில அதிகாரிகள் முக்கிய தகவல்களை அதற்கு அனுப்பியுள்ளனர்.
சில அரசு அதிகாரிகள் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரடியாக வந்து, ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம், இதுகுறித்து கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்சியரின் நேர்முக உதவியாளர், அப்படி எந்த புதிய மின்னஞ்சலிலும் இருந்து மெயில் அனுப்பப்படவில்லை எனக் கூறியுள்ளார்.
ஆட்சியரின் மின்னஞ்சல் முகவரி போன்ற போலியான முகவரியைப் பயன்படுத்தி, அரசின் முக்கிய தகவல்களை சமூக விரோதிகள் திருட முயன்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பெயரிலான மின்னஞ்சல் முகவரியிலிருந்து நீலகிரி மாவட்டம் முழுவதுமுள்ள அரசு அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. தற்போது குமரி ஆட்சியரின் பெயரிலும் போலி மின்னஞ்சல் உருவாக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.