சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 99 வயது சுதந்திர போராட்ட வீரர் கஃபூர், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர். 1997ஆம் ஆண்டு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தனக்கு தியாகிகள் பென்ஷன் வழங்கக்கோரி கஃபூர் விண்ணப்பித்திருந்தார்.
இந்த விண்ணப்பத்தின் மீது விசாரணை நடத்தி பரிந்துரை வழங்கும்படி தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், முதியவரை விசாரணைக்கு அழைத்தபோதும், 23 ஆண்டுகளாக தனது விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பென்ஷன் வழங்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி கஃபூர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், தனது இறுதி மூச்சுக்கு முன், சுதந்திரப் போராட்ட வீரர் என்ற அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 99 வயது சுதந்திரப் போராட்ட வீரர் கஃபூர் நீதிமன்றத்தை நாடி இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
தியாகிகள் பென்ஷன் கோரி 99 வயது முதியவரை, நீதிமன்றத்தை நாடச் செய்து அலைக்கழித்த செயலற்ற தன்மைக்காக, அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும் என கண்டனம் தெரிவித்த நீதிபதி, இந்த மனுவுக்கு நவம்பர் 6ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளி வைத்துள்ளார்.