தமிழ்நாடு

“பராமரிப்பின்றி பூங்காக்களை கைவிட்ட கோவை மாநகராட்சி நிர்வாகம்” - கார்த்திக் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!

தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் என்ற ஒரே காரணத்திற்காக பூங்காக்கள் பராமரிக்கப்படுவதில்லை.

“பராமரிப்பின்றி பூங்காக்களை கைவிட்ட  கோவை மாநகராட்சி நிர்வாகம்” - கார்த்திக் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா பூங்காக்களிலும், உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு பூங்காக்களிலும் துப்புரவுப் பணிகளையும், பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்ளுவதற்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக நா.கார்த்திக் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 201 ம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சிக் காலத்தில், கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது, அன்றைய தமிழக முதல் அமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களும், துணை முதல் அமைச்சராக இருந்த கழகத்தின் தலைவர் அவர்களும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா பூங்காக்களும், உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு பூங்காக்களும் அமைக்கப்பட்டன.

இந்த பூங்காக்களில் பல வகையான மூலிகைத் தன்மையுள்ள செடிகள், மரங்கள், பூச்செடிகள் நடப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்தது. மேலும் ஆண்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காக பூங்காக்களில் நடைபயிற்சி பாதையும், குழந்தைகள், மாணவ மாணவியர் விளையாட விளையாட்டு திடலும், விளையாட்டு சாதனங்களும் அமைக்கப்பட்டு இருந்தது.

மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்ட இந்த பூங்காக்கள் தற்போது போதிய பராமரிப்பு இன்றி பாழடைந்து கிடக்கிறது. பூங்கா பராமரிப்பு நிறுவனங்களுக்கான ஒப்பந்தத்தை கோவை மாநகராட்சி நிர்வாகம் புதுப்பிக்காததே இதற்கு காரணம். பூங்காவை சுத்தம் செய்யும் ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை.

மேலும் மரங்கள், செடிகள் ஆகியவை நீரின்றியும், போதிய பராமரிப்பு இன்றியும் புதர் மண்டி காணப்படுகிறது. சிறுவர் விளையாடும் சாதனங்கள் துருப்பிடித்து உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி பூங்காவில் அமைக்கப்பட்ட நடைபாதையில் நடைபயிற்சி செய்ய முடிவதில்லை.

“பராமரிப்பின்றி பூங்காக்களை கைவிட்ட  கோவை மாநகராட்சி நிர்வாகம்” - கார்த்திக் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!

பறவைகளும், குயிலும், மயிலும் கொஞ்சி விளையாடிய இந்த பூங்காக்களில் இன்று பூச்சிகள், பாம்புகள் குடியேறி விட்டது. தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் என்ற ஒரே காரணத்திற்காக பூங்காக்கள் பராமரிக்கப்படுவதில்லை. மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக அமைக்கப்பட்ட பூங்காக்களை கோவை மாநகராட்சி நிர்வாகம் இப்படி கண்டும் காணாமல் இருப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சமூக ஆர்வலர்களும் இதை வன்மையாக கண்டிக்கின்றனர்.

பூங்காக்கள் பராமரிப்பு குறித்து பலமுறை இதற்கு முன் இருந்த கோவை மாநகராட்சி ஆணையாளர், உதவி ஆணையாளர் ஆகியோரை, உடன் பொதுமக்களையும் அழைத்துக்கொண்டு, நேரில் சென்று சந்தித்து பலமுறை கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் பூங்காக்கள் பராமரிப்பு சம்பந்தமாக இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே கோவை மாநகராட்சி நிர்வாகம், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பூங்காக்களில் துப்புரவுப் பணிகளையும், பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்ளுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து பூங்காக்கள் பராமரிப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories