கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவரது வீட்டுக்கு சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். வீட்டில் அந்த தொழிலாளியின் 15 வயது மகள் மட்டும் தனியாக இருந்துள்ளார்.
அப்போது அந்த இளைஞர் உங்கள் வீட்டில் மந்திர தகடு ஒன்று புதைந்து இருக்கிறது. அதை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த மாணவி என் அப்பா வீட்டில் இல்லை அவர் வந்த பிறகு வந்து பாருங்கள் என்று கூறியுள்ளார். அப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, சொம்பில் தண்ணீர் கொண்டு வா என்று கூறியுள்ளார். மாணவி வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுக்கச் செல்லும்போதே அந்த நபர் பின்னால் சென்று வீட்டினுள் அமர்ந்து அந்த மாணவியையும் அமரும்படி மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன மாணவி உட்காரமாட்டேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து மாணவியை அடித்து சொம்பினுள் கையை விட்டு பார் உள்ளே தகடு இருக்கும் என்று மிரட்டியதால் அதிர்ச்சியடைந்த மாணவி சொம்பினுள் கையை விட்டு பார்த்த போது சொம்பினுள் தகடு ஒன்று இருந்துள்ளது.
இதனால் பயந்துபோன மாணவியிடம் உங்கள் வீட்டில் ஆறாயிரம் ரூபாய் இருக்கிறது, அதை எடுத்துக்கொண்டுவா என்று மிரட்டியுள்ளார். மந்திரவாதி கூறியது போன்று வீட்டில் ஆறாயிரம் ரூபாய் இருந்துள்ளது. அப்போது மாணவியின் தந்தை வீட்டினுள் வந்தார்.
அங்கு நடந்த சம்பவங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அந்த இளைஞருக்குத் தர்ம அடி கொடுத்து தென்தாமரைகுளம் போலிஸாரிடம் ஒப்படைத்தார்.
போலிஸார் அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில், அவர் நெல்லை மாவட்டம் தருவை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொற்றையடி மருந்துவாழ்மலையில் உள்ள ஒரு கோயிலில் கடந்த 20 நாட்களாகத் தங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்யாமல் அந்த இளைஞரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.