மாநில அரசின் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு தன்னிச்சையாகச் செயல்படும் துணைவேந்தர் சூரப்பாவை வெளியேற்ற எடப்பாடி பழனிச்சாமி அரசு திட்டவட்டமான முடிவு எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:-
“அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமனம் செய்யப்பட்ட போதே, தமிழகத்தில் கல்வியாளர்கள் எவரும் துணைவேந்தர் பொறுப்புக்கு தகுதியானவர்கள் இல்லையா? என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
துணைவேந்தர் பொறுப்பை ஏற்ற பின்னர் சூரப்பாவின் செயல்பாடுகள் அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை. மத்திய அரசின் நேரடி முகவர் போன்றுதான் அவரது நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.
அண்ணா பல்கலைக் கழகத்தின் பொறியியல் பாடத்திட்டத்தில் தத்துவவியல் படிப்பு சேர்க்கப்பட்டு, அதில் பகவத் கீதை, சமஸ்கிருதப் பாடங்கள் இடம்பெற துணைவேந்தர் சூரப்பா ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு எழுந்ததும் பகவத் கீதை, சமஸ்கிருதம் கட்டாயம் அல்ல, விருப்பப் பாடமாகப் படிக்கலாம் என்று பின்வாங்கினார். பொறியியல் பட்டப் படிப்புக்கு பகவத் கீதையும் சமஸ்கிருதமும் எதற்கு? என்ற கேள்விக்கு பதில் இல்லை.
அண்ணா பல்கலைக் கழகத்துக்கு ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ என்ற சிறப்பை அளிப்பதற்கு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை முன்வந்தது. இருப்பினும் ‘உயர் சிறப்பு நிறுவனம்’ என்ற சிறப்புரிமை பெறும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு 500 கோடி ரூபாய் வழங்கும் என்றும், மாநில அரசின் பங்காக 500 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்றும் பல்கலைக் கழக மானியக் குழு நிபந்தனை விதித்தது. தமிழக அரசு நிதித் தட்டுப்பாட்டில் இருப்பதால், இது குறித்து முடிவு எடுக்க முடியாமல் இருந்தபோது, கடந்த மே மாதம் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா தமிழக முதல்வரைச் சந்தித்தார்.
அப்போது பல்கலைக் கழகம் நிதி அடிப்படையில் வலுவான நிலையில் இருப்பதாகவும், மாநில அரசை சார்ந்திராமல் 500 கோடி ரூபாய் திரட்ட முடியும் என்று முதல்வரிடம் கூறியதாக செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழகத்திற்கு ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ என்ற சிறப்புரிமையைப் பெறுவது குறித்து முடிவு எடுக்க அமைச்சர் குழு ஒன்றை முதலமைச்சர் அமைத்திருந்தார். அக்குழு கொரோனா பேரிடர் காலத்தில் கூடி முடிவு எடுக்க முடியாத நிலை உருவாகிவிட்டது.
இச்சூழலில் துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு நேரடியாக எழுதி உள்ள கடிதத்தில், பல்கலைக் கழகத்தின் தேர்வு கட்டணம், இணைப்புக் கட்டணம் உள்ளிட்ட உள்வளங்களில் இருந்து வரும் வருவாய் மூலம் மாநில அரசின் பங்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையைப் பெற முடியும் என்று தெரிவித்து இருக்கிறார். இதனையடுத்து மத்திய உயர்கல்வித் துறைச் செயலாளர் அமித் கரே, தமிழக அரசுக்கு எழுதி உள்ள கடிதத்தில், துணைவேந்தர் சூரப்பா எழுதிய கடிதத்தையும், அதிகாரம் அளிக்கும் குழுவின் பரிந்துரையையும் சுட்டிக்காட்டி, நிதிநிலை உத்தரவாதத்தைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.
மாநில அரசின் கீழ் இயங்கும் அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், தமிழக அரசின் அனுமதி பெறாமல், மத்திய அரசுக்கு எப்படி நேரடியாகக் கடிதம் எழுதினார்? அல்லது துணைவேந்தர் சூரப்பாவிற்கு தமிழக அரசு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறதா? என்ற கேள்விகள் எழுகின்றன. இதற்கு தமிழக அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
மாநில அரசின் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு தன்னிச்சையாகச் செயல்படும் துணைவேந்தர் சூரப்பாவை வெளியேற்ற எடப்பாடி பழனிச்சாமி அரசு திட்டவட்டமான முடிவு எடுக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரித்தால், அதன் உலகப் புகழ் பெற்ற தனித்தன்மை பறிபோய்விடும் என்று கல்வியாளர்கள், அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் தெரிவித்து வரும் கருத்தை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அண்ணா பல்கலைக் கழகத்தின் 69 விழுக்காடு இடஒதுக்கீடு கொள்கைக்குக் குந்தகம் நேர்ந்துவிட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.