கடந்த 2019ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ஜி.குரும்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது.
பலியான சிறுமியின் பிரேத பரிசோதனை, டி.என்.ஏ மற்றும் கைரேகை நிபுணர்கள் அறிக்கை என அனைத்தும் சரியாக இருந்தும் வழக்கில் தொடர்புடையவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகும் போதிய ஆதாரம் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வருகிறது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “திண்டுக்கல்லில் 12 வயது சிறுமி மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்பட்ட வழக்கில், சாட்சியங்களை அரசு நிரூபிக்காததால் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை ஆகியிருக்கிறார். தமிழகம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகியிருப்பதை அரசு உறுதி செய்கிறது! #JusticeForKalaivani க்காக மேல்முறையீடு செய்க!” என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “திண்டுக்கல்லில் 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்து, மின்சாரம் பாய்ச்சி கொன்ற வழக்கில் குற்றவாளி விடுவிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இறந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க தமிழக அரசே மேல்முறையீடு செய்து குற்றவாளிக்கு உரிய தண்டனை வாங்கித்தர வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.