தமிழ்நாடு

பாலிசிதாரர்களுக்கு இந்தியில் கடிதம் அனுப்புவதா? - நேஷ்னல் இன்சுரன்ஸ் நிறுவனத்துக்கு சு.வெங்கடேசன் கண்டனம்

தமிழகத்தில் உள்ள நேஷ்னல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பாலிசிதாரர்களுக்கு இந்தியில் கடிதம் எழுதுவதை நிறுத்த மதுரை எம்.பி. சு வெங்கடேசன் கோரியுள்ளார்.

பாலிசிதாரர்களுக்கு இந்தியில் கடிதம் அனுப்புவதா? - நேஷ்னல் இன்சுரன்ஸ் நிறுவனத்துக்கு சு.வெங்கடேசன் கண்டனம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாலிசிதாரர்களுக்கு நினைவூட்டல் கடிதங்களை இந்தியில் அனுப்புவதை நிறுத்துமாறு வலியுறுத்தி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேஷ்னல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

“உங்கள் மதிப்புமிகு நேசனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பாலிசிதாரர்கள் எனது பார்வைக்கு கொண்டு வந்த ஒரு முக்கியமான பிரச்சினையை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

உங்கள் நிறுவனத்தின் பாலிசிதார்களுக்கு அனுப்பப்படும் பாலிசி புதுப்பித்தல் நினைவூட்டல் கடிதங்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் உள்ளது என்றும், இதனால் நிறைய வாடிக்கையாளர்களுக்கு உங்கள் கடிதத்தின் செய்தியை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.

பாலிசிதாரர்களுக்கு இந்தியில் கடிதம் அனுப்புவதா? - நேஷ்னல் இன்சுரன்ஸ் நிறுவனத்துக்கு சு.வெங்கடேசன் கண்டனம்

இது ஓர் போட்டி யுகம். அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வணிகக் களத்தில் சந்தைப் பங்கை தக்க வைக்க, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை எவ்வளவு பெரு முயற்சியோடு எதிர்கொண்டு வருகிறார்கள் என்பதை நான் அறிவேன். இப் பின்புலத்தில் வாடிக்கையாளர்களுடனான தகவல் தொடர்புகள் அவர்களின் இதயத்திற்கு நெருக்கமாகவும், நேசிக்கக் கூடியதுமான மொழியில் அமையவேண்டுமென்று எதிர்பார்ப்பது இயற்கையானது.

தமிழகத்தின் அறுதிப் பெரும்பான்மை மக்களுக்கு இந்தி தெரியாது. இதனால்தான் அன்றைய பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களால் 1963 ல் அலுவல் மொழிச் சட்டம் தமிழக மக்கள் மீது திணிக்கப்படாது என்ற உறுதி மொழி தரப்பட்டது. ஆனால் நேசனல் இன்சூரன்ஸ் கம்பெனி பாலிசி புதுப்பித்தல் நினைவூட்டல் கடிதங்களையும், பாலிசி பத்திரங்களையும் வாடிக்கையாளர்களின் உணர்வுகளை, தேவைகளைப் புறக்கணித்து இந்தியிலும் ஆங்கிலத்திலும் அனுப்புவது வருத்தம் தருகிறது.

மற்ற பல மத்திய அரசு நிறுவனங்களும் கடைப்பிடிக்காத ஒரு நடைமுறையை எதற்காக நேசனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிட்டெட் துவங்கியுள்ளது என்பது ஆச்சரியமாக உள்ளது. சில நிறுவனங்களில் பாலிசிதாரர்கள் விரும்பினால் மட்டுமே இந்தியில் படிவங்களும், ஆவணங்களும் கிடைப்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. அங்கெல்லாம் இது முழுக்க வாடிக்கையாளர் தெரிவாகவே உள்ளது.

நேசனல் இன்சூரன்ஸ் கம்பெனி செய்வது, வணிக ஈட்டல் மற்றும் வாடிக்கையாளர் மனங்களை வென்றெடுத்தல் ஆகிய இரண்டு கோணங்களில் இருந்தும் அறிவார்ந்த நடவடிக்கை அல்ல என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் எனக் கருதுகிறேன்.

ஆகவே படிவங்களில் இந்தி பயன்படுத்தப்படுவதை நிறுத்துமாறும் மற்றும் படிவங்களில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் இடம் பெறுவதை உறுதி செய்யுமாறும் வேண்டுகிறேன். இது எல்லாத் தட்டு வாடிக்கையாளர்களுக்கும் பயன்படும்.

இக் கடிதத்தின் உள்ளார்ந்த நோக்கத்தை ஏற்று உடனடியாக நேர் மறை நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

banner

Related Stories

Related Stories