பா.ஜ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும், தமிழ் உள்ளிட்ட தொன்மைவாய்ந்த மொழிகளைப் புறக்கணிப்பதுமான போக்கு தொடர்ந்து வருகிறது.
சமீபத்தில் இந்திய கலாசாரம் பற்றி ஆய்வு செய்தவதற்கான குழுவை அமைத்தது பா.ஜ.க அரசு. 16 பேர் கொண்ட அக்குழுவில் ஒருவர் கூட தென்னிந்தியர் - சிறுபான்மையினர் - பட்டியலினத்தவர் இடம்பெறவில்லை என்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஒரு அறிவிக்கையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான அறிவிக்கையை மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. இப்படிப்பிற்கான கல்வித் தகுதியில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழ் மொழி இடம்பெறவில்லை.
தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான கல்வித் தகுதியில் செம்மொழி தமிழ் இடம்பெறாதது தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செம்மொழியான தமிழ் மொழி படித்தோருக்கு திட்டமிட்டு வாய்ப்புகளை மறுப்பதா என பா.ஜ.க அரசுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இதுகுறித்து “மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான கல்வித் தகுதியில், செம்மொழி வரிசையில் தமிழ் இல்லை. இது கடும் கண்டனத்திற்குரியது” என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.