மத்திய அரசின் தொல்லியல் துறையின் தொல்லியல் நிறுவனம் உத்திரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வருகின்றது. இந்நிறுவனம், தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலை பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்திய வரலாறு, தொல்லியல்துறை, மானிடவியல் மற்றும் செம்மொழிகளான சமஸ்கிருதம், பாலி, மற்றும் அரபு மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மத்திய அரசின் தொல்லியல் துறையின் முதுகலைப் பட்டப் படிப்புக்கான கல்வித் தகுதியில் செம்மொழியான தமிழ் மொடி புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து செம்மொழியான தமிழ் மொழியையும் இணைக்க உத்தரவிட வேண்டும் என்றும் இந்த வழக்கை இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வழக்கறிஞர் அழகுமணி முறையீடு செய்தார்.
இந்த முறையீடு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை அவசர வழக்காக நாளை (அக்.,9) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.