கேரள மாநில எல்லைக்குள் மருத்துவக்கழிவுகள் செல்ல முடியாதவாறு அம்மாநில காவல்துறையினரும், அதிகாரிகளும் மக்கள் நலன் கருதி செயல்படுகின்றனர். ஆனால் தமிழக காவல்துறையினரும் அதிகாரிகளும் அவ்வாறு அக்கறையோடு இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியைச் சேர்ந்த மணிவேல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"வையம்பட்டி பகுதியில் உள்ள கரடுகுளம் கண்மாய் சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்தக் கண்மாயை நம்பி 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயப் பணிகளும் இந்த கண்மாயை நம்பியே செய்து வருகின்றனர்.
இந்த கண்மாய் அருகில் உள்ள மருத்துவமனையின், மருத்துவக் கழிவுகள் மருத்துவ பயன்பாட்டு ஆடைகள் போன்றவற்றை கண்மாய்க்குள் கொட்டி வருகின்றனர். மேலும் மருத்துவக் கழிவு பொருட்களை கண்மாய்க்குள் வைத்து எரித்து வருகின்றனர். இதனால் எங்கள் கண்மாயில் உள்ள நீர் மாசுபடுவதுடன் நிலத்தடி நீரும் கெட்டு வருகிறது. இதனால் எங்கள் பகுதியில் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், உடல் நலத்திற்கும் தீங்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே இதனை தடுத்து நிறுத்தக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர், மணப்பாறை தாசில்தார், மணப்பாறை வட்டார வளர்ச்சி அலுவலர், ஆகியோரிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே வையம்பட்டி பகுதியில் நீர் ஆதாரமாக உள்ள கரடுகுளம் கண்மாயில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதை தடுக்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரளா எல்லைக்குள் கழிவுப் பொருட்கள் செல்ல முடியாதவாறு அம்மாநில காவல் துறையினரும் அதிகாரிகளும் மக்கள் நலன் கருதி செயல்படுகின்றனர். ஆனால் அங்கிருந்து மருத்துவ கழிவுகள் தமிழகத்திற்குள் வருகிறது. இங்குள்ள காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மக்களின் நலன் மீது அக்கறையின்றி உள்ளனர்" என வேதனை தெரிவித்தனர்.
கண்மாய்க்குள் மருத்துவக் கழிவுகளை கொட்டுவதால் தண்ணீரில் கழிவுகள் கலந்து மக்களின் நலன் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளது. எனவே மருத்துவக் கழிவுகளை அகற்ற உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
மேலும், சுகாதாரத்துறை செயலர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டனர். மேலும், வெளி மாநிலங்களிலிருந்து கழிவுகள் கொட்டப்பட்டால், சம்பந்தப்பட்ட சோதனைச்சாவடியில் இருப்பவரே பொறுப்பாவார். அவர் மீதே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் மருத்துவக் கழிவுகள், தமிழகத்தில் தான் குவிக்கப்படுகிறதா? அவற்றை தடுக்க ஏதேனும் விதிகள், வழிகாட்டுதல் உள்ளனவா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது தொடர்பாக, சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.