பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் நாடுமுழுவதும் வெகுவாக அதிகரித்து வருகின்றன. கடந்த வாரத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
உத்தர பிரதேசத்தில் 19 வயதான தலித் பெண் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து அதே மாநிலத்தில் பல்ராம்பூர் மாவட்டத்தில் 22 வயது தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளனர்.
இதனிடையே, தமிழகத்தில் நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடமாநில பெண் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வல்லுறவு செய்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் புதிய பேருந்து நிலையம் அருகே கீழ வீதியில் இயங்கும் (வேதா மெஸ்) தனியார் உணவு விடுதியில் தாய்க்கு துணையாக 10 வகுப்பு பயிலும் 16 வயது மாணவி வேலைக்கு சென்று உள்ளார்.
அப்போது, உணவு விடுதி நடத்தி வரும் அதன் உரிமையாளர் சண்முக சுந்தரம் ஆசை வார்த்தை கூறி பலமுறை மாணவியிடம் பாலியல் வன்கொடுமை ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த மாணவியின் தோழி துர்கா தேவி தனது கணவர் அரவிந்தனிடம் இச்சம்பவம் குறித்து தகவல் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அரவிந்தன் 10ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரது நண்பர் விஜயன் மற்றும் உணவு விடுதி உரிமையாளர் சண்முக சுந்தரம் இணைந்து பலமுறை கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
மேலும், இம்மூவரும் இணைந்து பல்வேறு நபர்களுக்கு 10ம் வகுப்பு மாணவியை பாலியல் வல்லுறவுக்காக அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், உடல் நிலை பாதிக்கப்பட்ட மாணவி செய்வதறியாமல் தாய் தந்தையிடம் இச்சம்பவம் குறித்து தகவல் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறையினர் இச்சம்பவத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், விடுதியின் உரிமையாளர் சண்முக சுந்தரத்தை வைத்து கொண்டு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிகளை மேற்கொண்டு உள்ளனர்.
இச்சம்பவம் அறிந்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர்கள் குவிந்ததால், வேறு வழியின்றி கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு கணவன் அரவிந்தனுக்கு உதவிய துர்கா தேவி, அவரது கணவன் அரவிந்தன், அவரது நண்பர் விஜயன் உள்ளிட்ட மூவரையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
உணவு விடுதி உரிமையாளர் சண்முக சுந்தரம் தலைமறைவாக விட்டதாகவும் அவரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்ட சம்பவம் வேதாரண்யத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.