தமிழகத்தில் சாலை வரியை ரத்து செய்தால் மட்டுமே தனியார் ஆம்னி பேருந்துகளை இயக்க முடியும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொது ஊரடங்கு காரணமாகக் கடந்த 6 மாதங்களாகத் தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது. இந்தநிலையில் தற்போது அரசு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், தனியார் பேருந்துகளை இயக்க கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாய் வரை சாலை வரியாகச் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கால் கடந்த 6 மாதங்களாக வருமானம் இல்லாத நிலையிலும் இந்த தொழிலை நம்பி இருக்கும் சுமார் 2 லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் சாலை வரியைக் கட்ட முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே இந்த ஆண்டின் இரண்டு காலாண்டிற்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு தங்கள் கோரிக்கையை ஏற்றுச் சாலை வரியை ரத்து செய்தால் மட்டுமே ஆம்னி பேருந்துக்களை இயக்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த 6 மாத கால கொரோனா ஊரடங்கு காலத்தைக் கணக்கிட்டால், எங்களுக்குப் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனவே 6 மாதங்களுக்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்தி வருவதாகக் கூறியுள்ளனர்.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தமிழக அரசிடம் வைத்த கோரிக்கைகள் :
சாலை வரியை ரத்து செய்ய வேண்டும்.
பேருந்துகளில் 100 சதவீதம் பயணிகளுடன் இயக்க அனுமதிக்க வேண்டும்.
ஏ/சி வசதியுள்ள பேருந்துகளை இயக்கவும் அனுமதிக்க வேண்டும்.
இதுபோன்று பல கோரிக்கைகளை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அ.அன்பழகன் கூறினார். ஆனால், தமிழக அரசு எங்கள் கோரிக்கைகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறினார்.
மேலும், கொரோனா ஊரடங்கு காலத்தில் 6 மாதங்களுக்கான சாலை வரியை ரத்து செய்தால் மட்டுமே ஆம்னி பேருந்துகளை உடனடியாக இயக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று முடிவெடுத்துள்ளதாகக் கூறினார்.
இந்த தொழிலை நம்பி 2 லட்சம் குடும்பங்கள் உள்ள நிலையில் ஆம்னி பேருந்து தொழில் முடக்கத்தால் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைப் பொருட்படுத்தாமலும் எந்த விதமான நிவாரண உதவியும் வழங்காமலும் அவர்களின் கோரிக்கைக்கு விரைந்து எந்த முடிவும் எடுக்காமலும் அரசு மெத்தனமாகச் செயல்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் கருதுகின்றனர்.