கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது. இதனையடுத்து நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமலுக்கு வந்தது, அனைத்து தொழில்களும் முடங்கின. பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமே பாதிப்புக்குள்ளானது.
மேலும் பள்ளிகளும் மூடப்பட்டுள்ள நிலையில் தனியார்ப் பள்ளி ஆசிரியர்கள் மாத வருமானம் இல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவரது மனைவி செல்வி முதுநிலை இயற்பியல்,பி.எட்., ஆசிரியர் பட்டம் பெற்று பல்வேறு தனியார்ப் பள்ளிகளில் ஆசிரியராக வேலை செய்து வந்துள்ளார். இவர் தனது கணவர் சிவா நடத்தி வரும் தனியார் பள்ளியில் முதல்வராகப் பணிபுரிந்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் தன் வேலையை இழந்துள்ளார், இதனால் பள்ளி மூடிக் கிடப்பதால் போதிய வருவாய் இல்லை. எனவே குடும்ப வருவாய்க்காகத் தனது பள்ளிக்கு எதிரே பேருந்து நிறுத்தம் அருகே ஆவின் பாலகம் பெட்டிக்கடை வைத்து, தேநீர் விற்பனை செய்து வருகிறார்.
தன் பள்ளிக்கு எதிரே தேநீர்க் கடை வைத்துள்ளதால் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் இந்த ஆசிரியரிடம் வியாபாரம் செய்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தனியார் பள்ளி முதல்வர் செல்வி கூறியதாவது :
“நான் பல்வேறு தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வந்தேன். எனது திருமணத்திற்குப் பிறகு 10 ஆண்டுகளாக எனது கணவர் நடத்திவரும் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில் முதல்வராக பணியாற்றி வருகிறேன். பொதுமுடக்கத்தால் பள்ளி மூடப்பட்டிருப்பதால் வருவாய் என்பது இல்லை. எங்கள் பள்ளியில் பெரும்பாலும் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்கள் தான் படிக்கிறார்கள் எனவே அவர்களின் பெற்றோர்களால் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. எனவே நாங்கள் அவர்களையும் நாங்கள் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.
இந்தநிலையில் குடும்ப வருவாய்க்காக வண்ணாத்திக்குட்டை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பெட்டிக்கடையில் தினம்தோறும் தேநீர் விற்பனை செய்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலே, ஏராளமான தனியார் பள்ளி ஆசிரியர்கள், வருவாய் இன்றி வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இதுபோல வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அரசு நிவாரண உதவிகள் என்று இன்று வரை எதுவும் வழங்காமல் வஞ்சித்து வருகிறது அ.தி.மு.க அரசு.