இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் ராமகோபாலன் (94). கடந்த 27ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று ராமகோபாலன் காலமானார். அவரது மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், "இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர், பெரியவர் ராம கோபாலன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
சிந்தாந்த வேறுபாடுகள் எத்தனையோ இருந்தாலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், பெரியவர் ராம கோபாலன் அவர்களும், நல்ல நண்பர்களே! அவர்களிடையே இருந்த பரஸ்பர நன்மதிப்பு, ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாறிக் கொள்ளும் கண்ணியம், பண்பாடு மற்றும் பக்குவம் நிறைந்த நட்புணர்வு ஆகியவற்றை நான் அறிவேன். இருவரும் நேரில் சந்தித்து அளவளாவிய நேரங்களில் கூட, தத்தம் கொள்கைகளில் இருவருமே உறுதியாக இருந்தவர்கள். அந்தக் “கொள்கைச் சுதந்திரம்” இருவரின் நட்புணர்வில் என்றைக்குமே குறுக்கிட்டதில்லை.
ஆழ்ந்த ஆன்மீகச் சிந்தனையுடன், சமயக் கருத்துகளை சமுதாயத்திற்கு எடுத்துரைத்த துறவியான அவரது மறைவு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் இந்து முன்னணியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.