தமிழகத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, டெங்குவை பரப்பும் கொசுவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், சாலைகளில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், டெங்கு கொசுவை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் தூய்மைப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றை அப்புறப்படுத்த வேண்டியது மாநகராட்சி தான் எனவும் மனுதாரர் சூரியபிரகாசம் தெரிவித்தார். வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டியது போக்குவரத்து காவல் துறைதான் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி போக்குவரத்து காவல்துறையை கேட்டுக்கொள்ள வேண்டும் என மாநகராட்சிக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், கொசு கட்டுப்படுத்தும் புகை போடுவது போன்ற பணிகளுக்கு உரிய கருவிகளை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், டெங்கு பரவலை கட்டுப்படுத்த மருந்துகள் கொள்முதல் செய்வதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து விளக்கமளிக்கும்படி, மத்திய சுகாதார துறைக்கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2021 ஜனவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.