அக்டோபர் 1ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், நாடு முழுவதும் நான்காம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி அறிவித்தது.
அதன்படி, செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை முதற்கட்டமாக திறக்க அனுமதிக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. அதில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் ஆர்வத்தின் பேரில் பள்ளிக்கு வர செப்டம்பர் 21 முதல் அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்குச் செல்லலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த ஆகஸ்டு 29-ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட 4-வது பொதுமுடக்கத் தளர்வு ஆணையில் 50% ஆசிரியர்களும் பிற பணியாளர்களும் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு மட்டும் இது பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 21-ம் தேதி முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. அதைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளில், 9 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வரலாம் என்று குறிப்பிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் 10 முதல் 12 வரை படிக்கும் மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடப்பட்டது.
அதைப் பரிசீலித்த மாநில அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளின் 10-12 வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வருவதற்கு அனுமதி அளிக்கிறது. வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஏற்கெனவே, மத்திய அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை, பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி நடைமுறைப்படுத்தப்படும். இது நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் பொருந்தாது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த நிலையில் இன்று வெளியாகியுள்ள தமிழக அரசின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.