தி.மு.க முப்பெரும் விழாவை முன்னிட்டு சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில் தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் ஆன்லைன் கல்வி கற்கும் 300 ஏழை மாணவர்களுக்கு இலவச டேப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்கு TAB வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில், பேசிய உதயநிதி ஸ்டாலின், “மாணவர்கள் உள்ள அரங்கில் நுழைந்தபோது பள்ளிக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது.
ஆன்லைன் வகுப்புகளில் படிக்க மாணவர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முதன்முதலாக குரல் கொடுத்தவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். நான் கல்வி அமைச்சரையும் சந்தித்தேன், அதன்பிறகு 10 நாட்களில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தனர்.
மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். ஆன்லைன் முறைகேடுகள் சரிசெய்யப்படும். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வு ரத்து செய்யப்படும். சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவராக முடியும் என்று முன்பு சொல்வார்கள். இப்போது யாருக்காவது சமஸ்கிருதம் தெரியுமா? நம் வீட்டுப்பிள்ளைகள் படிக்கக்கூடாது என்பதற்காகவே புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்துள்ளனர்.
இந்தியாவிலேயே முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தி.மு.க தலைவரை முதல்வராக்க காத்துக் கொண்டிருக்கின்றார்கள். 7 மாதத்தில் தேர்தல் நடக்கும் .கண்டிப்பாக தி.மு.க ஆட்சியை பிடிக்கும்” எனப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் இளைஞரணி துணைச்செயலாளர் ஜோயல், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, தி.நகர் கிழக்கு பகுதி செயலாளர் ஜெ. கருணாநிதி, மேற்கு பகுதி செயலாளர் கே.ஏழுமலை உள்ளிட்ட பகுதி செயலாளர்கள், கழக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.