தூத்துக்குடி தட்டார்மடம் பகுதியைச் சேர்ந்த செல்வன் என்பவர் கடந்த வாரம் கடத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அ.தி..முக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்டோரை கைது செய்ய கோரி உறவினர்கள் 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திருச்செந்தூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் செல்வன் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறியதோடு அவர்களது போராட்டத்திலும் கலந்து கொண்டார். இந்தநிலையில், நேற்று முன்தினம் தண்டுபத்து கிராமத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது காரை மர்ம நபர்கள் சிலர் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர் த.செல்வன் என்பவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நியாயம் கிடைக்கப் பாடுபடுவோரை “ரவுடியிசம்” மூலம் அச்சுறுத்தத் துணை போவது, மேலும் பிடிபடாமல் உள்ள “உண்மையான குற்றவாளிகள்” வேறு யார் என்ற கேள்வியை எழுப்புகிறது” என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மக்கள் விரோத மசோதாக்களை சட்டமாக்க உதவுவது, தர்மயுத்தம் செய்தவரை செல்லாக் காசாக்குவது, டெண்டர்கள்... முதல்வருக்கு இப்படி ஏகப்பட்ட பணிகள்.
ஆதலால் அவர் கவனிக்கும் காவல்துறையை அந்தந்த மாவட்ட அதிமுகவினரே ‘கவனிப்பர்’ போலிருக்கிறது! சட்டம் ஒழுங்கு கோமாவில் இருக்க இந்த கவனிப்பே காரணம். அதற்கு சிறந்த உதாரணம், தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையால் நிகழ்த்தப்படும் தொடர் மரணங்கள்.
சாத்தான்குளம் இரட்டை கொலைகளை தொடர்ந்து, அதே பகுதியிலுள்ள தட்டார்மடம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகருடன் சேர்ந்து செல்வன் என்ற இளைஞரை கடத்தி கொலை செய்துள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மா.செயலாளர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்ததும் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. முதல்வர் தன் வழக்கமான கவனிப்பிலிருந்து விலகி காவல்துறையையும் கவனிக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அனிதா ராதாகிருஷ்ணன் கார் உடைக்கப்பட்ட வழக்கில் காயல்பட்டினத்தை சேர்ந்த ஜின்னா, தண்டுபத்தை சேர்ந்த செல்வநாதன் ஆகிய இருவரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.