ஊரடங்கு காலத்தில் நாடுமுழுவதும் மூடப்பட்டுள்ள 14 லட்சம் அங்கன்வாடிகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், தாய்மார்கள் தொடர்பான விபரங்களைத் தாக்கல் செய்யக் கோரி தீபிகா ஜெகத்ராம் சஹானி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அதேபோல அங்கன்வாடி மையங்களும் மூடப்பட்டுள்ளன.
அந்த அங்கன்வாடி நிலையங்கள் மூலம் நாள்தோறும் உணவு பெற்று வந்த குழந்தைகளும், பாலூட்டும் தாய்மார்களும் சரிவிகித ஊட்டச்சத்து உணவு கிடைக்காமல், பட்டினியால் அவதியுறுகின்றனர்.
எனவே இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த மனு, நீதிபதி அசோக் பூசன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தனர். இதனையடுத்து வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.