தருமபுரி மாவட்டத்தில் காப்பர், இரும்பு, கருப்பு கிரானைட் உள்ளிட்ட கனிமங்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளன. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தின் பென்னாகரம், காரிமங்கலம், பாப்பிரெட்டிபட்டி, அரூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களில் கருப்பு கிரானைட் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் கடந்த ஜூன் 3ம் தேதி வெளியிட்டார்.
அதில் ஏலம் எடுப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 28ம் தேதி என தெரிவிக்கப்பட்டிருந்தது. கருப்பு கிரானைட் எடுப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தடையின்மை சான்று பெற வேண்டும் அதன் பின்னர் தான் மாநில அரசு ஏல அறிவிப்பை வெளியிட வேண்டும் என விதிகள் உள்ளன.
ஆனால் இந்த விதிகள் எதையும் பின்பற்றாமல் தமிழக அரசு வெளியிட்டுள்ள ஏலத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் புதிய ஏல அறிவிப்பை விதிகளை பின்பற்றி வெளியிடக் கோரியும் தருமபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச்செல்வன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.