கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே நீதிமன்ற பெண் ஊழியரை தாலி கட்டிய கணவனே நாற்காலியில் கை, கால்கள் மற்றும் வாயை கட்டி சித்திரவதை செய்து, அரிவாளால் வெட்டி, கொடூரமாக பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே நடுவில் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் ராஜன்(53). இவரது மனைவி ஹெப்சிபாய்(40). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை குழந்தைகள் இல்லை. ஹெப்ஸிபாயை அவரது கணவர் நீண்ட காலமாக துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், ஹெப்சிபாய்க்கு அரசு பணி கிடைத்தது. அவர் கடந்த 2 - ம் தேதி இரணியல் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார். சம்பவத்தன்று சுரேஷ்ராஜன், தனது வீட்டின் கதவை பூட்டி வைத்து வீட்டிற்குள் தாலி கட்டிய மனைவியான ஹெப்சிபாயை காலில் அரிவாளால் வெட்டிய தோடு நாற்காலியில் கை மற்றும் வாயை கட்டி வைத்து கொலை முயற்சி மேற்கொண்டதோடு கொடூரமாக சித்திரவதை செய்து பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றுள்ளார்.
இதனால் அவர் அலறவே, அண்டை வீட்டார் குலச்சல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து போலிஸார் அங்கு சென்றபோது ஹெப்சிபாய் காலில் வெட்டு காயத்துடன் நாற்காலியில் கைகளும் வாயும் கட்டப்பட்டிருந்த நிலையில், கொடூரத் சித்ரவதைக்கு உள்ளாகி அழுதுகொண்டிருந்தார். அருகில் சுரேஷ்ராஜன் கத்தியுடன் சித்திரவதை செய்து கொண்டிருந்தார்.
நீதிமன்ற ஊழியரை மீட்ட போலிஸார், சுரேஷ்ராஜன் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு சுரேஷ்ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, ஹெப்சிபாய் நாற்காலியில் கட்டப்பட்டு கொடூர சித்திரவதைக்கு உள்ளான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.