தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், வட கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், வட கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வரும் 20ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
செப்டம்பர் 21 வரை மன்னார் வளைகுடா பகுதிகள், கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
செப்டம்பர் 19ல் தெற்கு வங்கக்கடல், மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்ககடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 20ல் தெற்கு வங்கக்கடல், மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்ககடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
செப்டம்பர் 21ல் தென்மேற்கு வங்கக்கடல், மத்திய வங்ககடல் மற்றும் வடக்கு வங்ககடலில் சூறாவளி காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 22ல் மத்திய மேற்கு வங்ககடலில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
கடல் உயர்அலை முன்னறிவிப்பு
தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி 20.09.2020 இரவு 11:30 மணி வரை கடல் உயர் 3.5 முதல் 4.2 மீட்டர் வரை எழும்பக்கூடும்.