பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவை பா.ஜ.கவினர் பல இடங்களில் கொண்டாடினார்கள். இதன் ஒருபகுதியாக, சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் மாநில தலைவர் எல்.முருகன், குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஊர்வலமாக வந்தார்.
அதுமட்டுமல்லாது, சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற எல்.முருகன் கொரோனா விதிமுறைகளை துளியும் மதிக்காமல் கூட்டம் கூட்டமாக யாத்திரை சென்றார்.
முக கவசம் இன்றியும், போதிய சமூக இடைவெளி இன்றியும், பா.ஜ.கவினர் பலரும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் கலந்துக்கொண்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவின்போது பா.ஜ.க அலுவலகத்திற்கு அனுமதி இல்லாமல் , பொதுமக்களுக்கு இடையூறாக குதிரை வண்டியில் வந்ததாக பா.ஜ.க மாநில தலைவர் முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொது இடங்களில் அதிகமானோர் கூடியது தொடர்பாக மாம்பலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகரன், மாம்பலம் காவல் நிலையத்தில் புகாரின் அடிப்படையில், பா.ஜ.க மாநில தலைவர் முருகன், மாநில துணைத்தலைவர் எம்.என்.ராஜன், மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் உள்ளிட்ட 106 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், பேரிடர்மேலாண்மைச் சட்டம், தொற்றுநோய் பரப்பும் வகையில் நடந்துகொள்ளுதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் போலிஸார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும், அனுமதியின்றி விளம்பர பேனர்கள்வைத்ததாக தனித் தனியாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி முன்னதாக முறையான அனுமதி பெறாமல் பாஜகவினர் சென்னை பாடியில் கேஸ் பலூன்களை பறக்கவிட்டு கொண்டாட்டங்களை முன்னெடுத்தனர். அப்போது கேஸ் பலூன்கள் வெடித்துச் சிதறியதில் பா.ஜ.க விவசாய அணி துணைத் தலைவர் உள்பட பலர் தீ காயங்களடைந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.