கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றைத் தடுக்கப் போராடிவரும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் தமிழகத்தில் ஏற்கனவே 43 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், அதை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மறுத்துவந்தார். தற்போது தமிழகத்தில் 63 மருத்துவர்கள் உயிரிழந்ததாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 382 மருத்துவர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது ஐ.எம்.ஏ. தமிழ்நாட்டில் தான் அதிக மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிர்நீத்த மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அரசு செயல்படவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
உயிரிழந்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பற்றிய புள்ளி விவரங்கள் இல்லை என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கிறார். தமிழக அரசோ, தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலமுறை வலியுறுத்தியும் உண்மையான பட்டியலை வெளியிட மறுக்கிறது.
இந்நிலையில் இதுகுறித்து தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் இறந்தனர் என ஆதாரத்தோடு சொன்னேன். அடிமைகள் அதை பொய்யாக்க முயன்று தோற்றனர். தற்போது கூடுதலாக 20 என மொத்தம் 63 மருத்துவர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
ஆவேசமாக பொய் பேசி -ஆசுவாசமாக கொள்ளையடிக்கும் எடுபிடிகளின் தோல்வியே மருத்துவர்கள் மரணத்துக்கு காரணம். கொரோனா தடுப்பு போரில் இறந்த மருத்துவர் குடும்பங்களை வஞ்சிக்காமல் அறிவித்தபடி ரூ.50 லட்சம் இழப்பீட்டை அடிமை அரசு உடனே வழங்க வேண்டும். கொள்ளை அடிப்பதற்காக கொரோனாவை பொத்திப் பாதுகாக்காமல் - தொற்றால் திண்டாடும் தமிழகத்தை மீட்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.