சென்னை புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், தி.மு.க ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு அவர்களின் முயற்சியால் நிதி ஒதுக்கப்பட்டு பலம் கட்டும் பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பின்னர் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின் அ.தி.மு.க ஆட்சியில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆமைவேகத்தில் கட்டப்பட்ட இரண்டு மேம்பாலங்களும் திறக்கப்பட்டன. சென்னை புறநகர் பகுதியான பல்லாவரம் மிக முக்கியமான ஒரு பகுதியாகும். அங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும். வாகனங்கள் ஆமை வேகத்தில் செல்லும். மருத்துவ அவசரங்களுக்குக் கூட விரைவாகச் செல்ல முடியாத சூழ்நிலையில் நிறைய உயிரிழப்புகள் நிகழ்ந்தன.
முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் போன்ற காலங்களில் அதிக கூட்ட நெரிசலால் வாகனங்கள் செல்லமுடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்த நிலையில் ஜி.எஸ்.டி சாலையில் பல்லாவரம் பகுதியில் குன்றத்தூர் செல்லும் சாலை சந்திப்பு பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது அந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.
பின்னர் 2016ஆம் ஆண்டு 82.66 கோடி செலவில் பல்லாவரம் மேம்பாலம் அமைக்கும் தொடங்கியது. இதன்படி பல இன்னல்களை கடந்து தற்போது 1.53 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த மேம்பால பணிகள் முடிந்து தற்பொழுது முதலமைச்சரால் திறக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம் ரேடியல் சாலையை கடந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சென்னை விமான நிலையம் வரை செல்கிறது. மூன்று வழிகள் கொண்ட மேம்பாலமானது திறக்கப்பட்டதால் தாம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் எளிதாக கடந்து செல்ல முடியும்; கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டியதில்லை.
அதுமட்டுமின்றி, தாம்பரத்தை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அருகே கூடுவாஞ்சேரி மற்றும் கேளம்பாக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதை சரிசெய்ய அங்கேயும் ஒரு மேம்பாலம் 55 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பால பணிகள் செயல்படுத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.