விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவருக்கு சொந்தமான 2 கோடி ரூபாய் மதிப்பிலான வைர மோதிரங்கள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ஆசாரம்குப்பத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவர் தன்னுடைய 4 வைரமோதிரங்களை விற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை திடீரென்று வழி மறித்த கும்பல் ஒன்று அவரது கண்களில் மிளகாய்ப்பொடியை தூவி 2 கோடி ரூபாய் மதிப்பிலான வைர மோதிரங்களை கடத்திச் சென்றது.
இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த போலிஸார் தனிப்படை அமைத்து தேடினர். அதில் பரந்தாமன், அருள்முருகன், விஜயசேகர், மகேஷ், மணிகண்டன் என்ற 5 பேரை போலிஸார் கைது செய்தனர். மேலும் சில பேரைத் தேடி ஆந்திர மாநிலத்துக்கு தனிப்படை போலிஸார் விரைந்தனர்.
இந்நிலையில் திருப்பதி பேருந்து நிலையத்தில் தேடுதலில் ஈடுபட்டிருந்த தமிழக போலிஸார் சந்தேகத்துக்கு இடமான ஒரு காரை சுற்றி வளைத்து அதில் சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் இருந்தவர்கள்தான் வைர மோதிரங்களை கடத்தியவர்கள் என தெரியவரவே, அவர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்களிடம் இருந்த வைர மோதிரங்களையும், அவர்கள் கொள்ளைக்கு பயன்படுத்திய காரையும் கைப்பற்றி போலிஸார் தமிழகம் விரைவதாக தகவல் வெளியாகியுள்ளது.