தமிழ்நாடு

“சுயலாபத்துக்காக வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையிடும் கருப்பு ஆடுகள்” - சென்னை ஐகோர்ட் காட்டம்!

சுயலாபத்திற்காக அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அரசு துறையில் உள்ள கருப்பு ஆடுகள் முட்டுக்கட்டையிடுவதாக குற்றம்சாட்டியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

“சுயலாபத்துக்காக வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையிடும் கருப்பு ஆடுகள்” - சென்னை ஐகோர்ட் காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு கிராமத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக ஏறத்தாழ 20 ஏக்கர் நிலங்கள் கையகபடுத்தப்பட்டன. இதில் 2001ல் இதற்கான இழப்பீடு தொகை நிர்ணயம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது. இந்த தகவல் நில உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்படாததால், அந்த நில உரிமையாளர்களே அனுபவித்து வந்தனர்.

இந்நிலையில் வீட்டு வசதி வாரிய திட்டத்தை செயல்படுத்துவதற்காக டெண்டர் கோரப்பட்டு, அந்த நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்ற மக்களிடம் கருத்து கேட்டு பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அறிவிப்பிற்கு பிறகே தங்கள் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை அறிந்த நில உரிமையாளர்கள் பழனிசாமி, சந்திரமதி உள்ளிட்ட பலர் நில கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

“சுயலாபத்துக்காக வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையிடும் கருப்பு ஆடுகள்” - சென்னை ஐகோர்ட் காட்டம்!

இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பு முறையாக வெளியிடப்படவில்லை என்றும், இழப்பீடு வழங்கியது சட்டத்தை பின்பற்றி வழங்கவில்லை என்றும், நீண்ட காலத்திற்கு பிறகு அவசரகதியில் திட்டம் செயல்படுத்தப்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில் திட்டத்தை 1999லிருந்தே படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், வழக்கு தொடர்புடைய நிலம் குறித்த உண்மை ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்று நில கையகப்படுத்தும் பணிகள் காலாவதியாகிவிட்டதால், அந்த நடைமுறைகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், ஆவணங்கள் மாயமானது குறித்து மாநில அரசு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கையும், தனி நபர்களுக்கு தொடர்பிருந்தால் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

பொது நலனை கருத்தில் கொண்டு அரசு திட்டங்களை அமல்படுத்தும்போது, அரசு துறையில் உள்ள கருப்பு ஆடுகள் சுயலாபத்திற்காக வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையிடுவதாக வேதனை தெரிவித்த நீதிபதி, அந்த கருப்பு ஆடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் விட்டால் பொது நலனில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்ததுடன், இந்த உத்தரவை பெற்றவுடன் அரசு உடனடியாக செயல்படும் என எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories