மதுரை தல்லாகுளம் பட்டாலியன் காவல்குடியிருப்பை சேர்ந்த காவல்துறை சார்பு ஆய்வாளரின் மகளான ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தை உலுக்கியுள்ளது.
நாளை (செப்டம்பர் 13) நீட் தேர்வு நடைபெறவிருக்கும் நிலையில், மன அழுத்தத்தாலும், அச்சத்தாலும் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக அவர் தன் குடும்பத்தினருக்கு எழுதிய கடிதம் அனைவரையும் உலுக்கியுள்ளது.
மாணவி மரணம் குறித்து வேதனை தெரிவித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “அச்சத்தினால் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்தது அதிர்ச்சியளிக்கிறது.
நீட் தேர்வு மாணவர்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா மரணம் முதல் ஜோதிஸ்ரீ துர்காவரை உணர முடிகிறது. மீண்டும் சொல்கிறேன்; தற்கொலை என்பது தீர்வல்ல; நீட் ஒரு தேர்வே அல்ல!” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘ஃபெயிலாயிடுவேனோனு பயமா இருக்கு’ நீட் பயத்தால் தற்கொலைசெய்த மதுரை ஜோதிஸ்ரீ எழுதிய கடிதம் இது. தமிழக மாணவர்களை இப்படி பயத்துக்குள்ளாக்கி மருத்துவம் படிக்கவிடாமல்தடுப்பதும், ‘பிள்ளைகள் உயிரோடிருந்தாலே போதும்’ என பெற்றோரை நினைக்கவைப்பதுமே மோடி-எடப்பாடி சாதனை” என ட்விட்டரில் தெரிவித்தார்.
இந்நிலையில், நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவின் குடும்பத்தினரை அவர்களது சொந்த ஊரான அருப்புக்கோட்டைக்கு நேரில் சென்று சந்தித்து தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
மேலும், ஜோதிஸ்ரீ துர்கா குடும்பத்தினருக்கு தி.மு.க சார்பாக ரூ. 5 லட்சம் நிதி உதவியும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,
“சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்யுமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம். அடிமை அ.தி.மு.க அரசு நீட் தேர்வை அனுமதித்து, மாணவர்களின் தற்கொலைகளை வேடிக்கை பார்க்கிறது.
கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகிறோம். சமீபத்தில்தான் அரியலூர் மாவட்டத்தில் மாணவன் விக்னேஷ் நீட் தேர்வால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார்.
மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை குறித்த எடப்பாடி பழனிசாமியின் இரங்கல் செய்தியில், மாணவியின் இறப்புக்கான காரணத்தையே அவர் குறிப்பிடவில்லை.
ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள டெல்லி செல்லும் அ.தி.மு.க முதல்வரும், அமைச்சரும் நீட் தேர்வை ரத்து செய்ய போராதது ஏன்? இதைக்கூட செய்யமுடியவில்லை என்றால் எதற்கு ஆட்சியில் இருக்கிறீர்கள்?” என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “தற்கொலை செய்துகொண்ட அந்தப் பெண் கடிதம் எழுதி வைத்திருக்கிறார். அதில் I am sorry, I am tired என்று குறிப்பிட்டிருக்கிறார். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் மன்னிப்புக் கேட்க வேண்டியது அந்த மாணவி அல்ல. ஆட்சியாளர்கள்தான்.
பா.ஜ.க அரசும் இந்த அடிமை எடப்பாடி அரசும் தான் அந்தப் பெண்ணிடமும் அவரது குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
நீட் வரக் காரணம் அ.தி.மு.க அரசுதான். ஆனால் தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாக பொய் பிரச்சாரம் செய்கின்றனர். ஆரம்பத்திலிருந்து நீட் தேர்வை தி.மு.க எதிர்த்து வருகிறது.
நான் மாணவர்களிடம் சொல்லிக்கொள்வது என்னவென்றால், தைரியமாக தேர்வு எழுதுங்கள் எந்தவிதமான தவறான முடிவுக்கும் செல்லாதீர்கள்; மன உளைச்சலுக்கு ஆளாகாதீர்கள்; எட்டு மாதங்களில் ஆட்சி மாற்றம் வரப்போகிறது. தி.மு.க தலைவர் சொன்னதுபோல ஆட்சி மாற்றம் வந்த பிறகு மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ‘கட்டை விரலோ தலையோ எவரும் கேட்டால் அவர்கள் பட்டை உரியும்’ எனத் தெரிவித்தார்.