சென்னை பட்டினப்பாக்கம் சிக்னல் அருகே இன்று காலை 8.15 மணிக்கு அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் தாத்தா பாட்டியுடன் வந்த தரமணியைச் சேர்ந்த 4 வயது குழந்தை பிரணிஷ் சம்பவ இடத்திலேயே மூளை சிதறி தாத்தா - பாட்டி கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தான். அதைப்பார்த்த அவர்கள் துடிதுடித்து போயினர்.
மேலும் இச்சம்பவத்தில் 3 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த மூன்று பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய லாரி நிற்காமல் அங்கிருந்த போக்குவரத்து சிக்னல் கம்பங்களில் மோதியது.
இதில், சிக்னல் கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. இந்த விபத்து காரணமாக அரை மணி நேரம் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தண்ணீர் லாரி ஓட்டுனர் தப்பியோடிவிட்டார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ஒட்டுனர் 38 வயது ஷபிர் அகமது தேடி வருகின்றனர். மேலும்,விபத்து நடந்தபகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை மட்டும் பிற மாவட்டங்களிலும் தண்ணீர் லாரிகளுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தி விபத்துக்களை தடுக்கவேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.