மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய் ஏழை எளிய மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்து வருகிறது.
நீட் தேர்வால் மருத்துவர் கனவு நிறைவேறாமல் அனிதா தொடங்கி கோவை சுபஸ்ரீ வரை பலர் உயிரிழந்துள்ளனர். தற்போது, அரியலூர் மாவட்டம் எலந்தங்குழி கிராமத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த விக்னேஷ் என்ற மாணவன் கடும் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நீட் தேர்வால் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “இன்னும் எத்தனை உயிர்களை இழக்க வேண்டும்? இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை நிறுத்தும்?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “பிஞ்சுகளின் கனவை தகர்த்து உயிரைப் பறிக்கும் ’சீரியல் கில்லர்’ போன்ற நீட்டை பாசிச - அடிமைக் கூட்டணி பொத்திப் பாதுகாப்பதும் தினசரி நீட் மரணங்களை கண்டும் காணாமலும் இருப்பது ஏன்” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், நீட் தேர்வால் உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்த தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். மேலும், தி.மு.க சார்பில் ரூபாய் 5 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “நீட் தேர்வால் வருடந்தோறும் மாணவர்கள் உயிரிழப்பது குறித்து தமிழக அரசுக்கு அக்கறை இல்லை. டாஸ்மாக் திறப்பதற்கு உச்சநீதிமன்றம் சென்ற தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் செல்லாதது ஏன்?
மத்திய அரசுக்கு அடிமை அரசாக தமிழக அரசு உள்ளதால் இந்த நிலைமை நீடித்து வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என தி.மு.க சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இதுவரை ஆளும் அ.தி.மு.க அரசு செவி சாய்க்காதது மக்கள் மீது அக்கறையின்மையையே காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.