“எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கைக்கு எதிரான குரலை, மக்களின் குரலாக ஒலிப்பார்கள்!”
“சூழலுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை தி.மு.க. ஆட்சியில் அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், "சூழலியலைத் தகர்க்கும் சட்டம்" என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை - 2020 குறித்த இன்று (4-9-2020), கருத்தரங்கம் காணொலி வாயிலாக நடைபெற்றது.
இக்கருத்தரங்கில், மூத்த பத்திரிகையாளர் திரு. 'இந்து' என்.ராம், சூழலியல் வழக்கறிஞர் திரு. ரித்விக் தத்தா, சூழலியல் செயற்பாட்டாளர்கள் திரு. லியோ சல்தான்ஹா மற்றும் திரு. சுந்தர்ராஜன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். இவர்களோடு, கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக செய்தித்தொடர்பாளர்களும் இந்தக் காணொலி நிகழ்வில் பங்கேற்றனர்.
இக்கருத்தரங்கில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை தொடர்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறும் காணொலிக் கருத்தரங்கில் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை முன்வைத்திருக்கும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மூத்த பத்திரிக்கையாளர் திரு. என்.ராம் அவர்களே! சூழலியல் வழக்கறிஞர் திரு. ரித்விக் தத்தா அவர்களே! சூழலியல் செயற்பாட்டாளர் திரு. லியோ சல்தான்ஹா அவர்களே! பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் திரு. சுந்தர்ராஜன் அவர்களே! சூழலியல் ஆர்வலர்களே! கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களே! கழக முன்னோடிகளே! தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களின் வாயிலாக இதனைக் கண்டு வரும் தமிழ்ப்பெருமக்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்!
இந்தியாவின் சுற்றுச்சூழல் மட்டுமல்ல; உலகத்தின் சுற்றுச்சூழலும் சுகாதாரமும் கெட்டுப் போய்க்கிடக்கும் காலக்கட்டத்தில், இத்தகைய ஒரு கருத்தரங்கை நாம் நடத்திக் கொண்டு இருக்கிறோம்.
சில வாரங்களுக்கு முன்னால் கல்வி உரிமையைக் காப்பாற்றுவதற்காக இப்படி ஒரு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் நாட்டில் ஏற்கனவே இருக்கும் கல்வியைச் சிதைக்கும் காரியத்தைச் செய்ய மத்திய அரசு அந்தக் கொள்கையைக் கொண்டுவருவதைக் கண்டிக்கும் வகையில், அந்தக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்றைய கருத்தரங்கத்தின் நோக்கம், சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதற்காகக் கொண்டுவரப்படும் சட்டம், சூழலைக் கெடுப்பதாக அமைந்திருப்பதை மத்திய அரசுக்கு எடுத்துக் காட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா என்ற நோய் உலகம் முழுவதும் பரவி உள்ளது. இதன் காரணமாக அனைத்து நாடுகளின் மனதிலும் மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
எவ்வளவு பணம், வசதி வாய்ப்புகள் இருந்தாலும் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் இயற்கை சீராக இருக்க வேண்டும், இயற்கையைக் கெடுத்துவிடக்கூடாது என்ற எண்ணத்துக்குப் பெரும்பாலான நாடுகள் வந்துள்ளன.
பல நாடுகள் தங்களது கொள்கையை இயற்கை வளங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து வருகின்றன. இப்படி இருக்கையில் இந்தியா மட்டும் இயற்கை வளங்களுக்கு எதிரான வகையில் சட்டம் கொண்டுவரத் துடிக்கிறது. அதனைச் சுட்டிக்காட்டுவதற்காகத்தான் நாம் கூடியிருக்கிறோம்.
இந்தக் கருத்தரங்கில் தமிழகத்தைச் சேர்ந்த இருவரும் - தமிழகத்துக்கு வெளியே இருந்து இருவரும் தங்களது கருத்துகளைச் சொல்லி இருக்கிறார்கள்.
சுற்றுச்சூழல் வழக்கறிஞராக இருக்கும் ரித்விக் தத்தா அவர்கள் டெல்லியில் இருந்து காணொலி மூலமாகப் பேசி இருக்கிறார்.
லியோ சல்தான்ஹா அவர்கள் பெங்களூரிலிருந்து பேசி இருக்கிறார். அவர்கள் இருவரும் தொடர்ச்சியாகச் சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதற்காகப் பல்வேறு போராட்டங்களை மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் நடத்திக் கொண்டு இருப்பவர்கள்.
இந்தச் சட்டம் எவ்வளவு மோசமானதாக இருக்கிறது என்பதை அவர்கள் இருவரும் சொன்னார்கள். நம்முடைய ‘இந்து' ராம் அவர்களைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.
அடக்குமுறைக்கு எதிராக எப்போதும் குரல் கொடுக்கக் கூடியவராக ராம் அவர்கள் இருப்பார்கள். மனித உரிமைகளுக்காகப் போராடி வருபவர். அவரும் தன்னுடைய கருத்தை ஆணித்தரமாகச் சொன்னார்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன் இங்கு தனது கருத்துகளை முன்வைத்தார். தமிழகத்தில் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளுக்காகத் துணிச்சலோடு போராடும் வாதாடும் அமைப்பாக அந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் நான்கு முக்கிய பேச்சாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் அழைப்பை ஏற்று இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்துக்கூறிய உங்கள் அனைவருக்கும் நன்றி!
ஓர் அரசாங்கம் ஏதாவது ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தால் அது மக்களுக்கு ஓரளவு பயனுள்ள சட்டமாக அமையும். அத்தகைய நோக்கத்துடன் தான் சட்டம் கொண்டு வருவார்கள். ஆனால், மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்த பிறகு கொண்டுவரும் அனைத்துச் சட்டங்களும் மக்களுக்கு விரோதமான - மாநிலங்களுக்கு விரோதமான - ஜனநாயக விரோதமான சட்டங்களாகத்தான் இருக்கின்றன.
ஒரே நாடு என்ற அடிப்படையில் கொண்டுவரப்படும் அனைத்துச் சட்டங்களும், மாநில அரசுகளை இல்லாமல் ஆக்கும் சட்டங்களாகவே இருக்கின்றன.
புதிய கல்விக் கொள்கை, கல்வித்திட்டத்தையே சிதைக்கப் போகிறது. நீட் தேர்வைக் கொண்டு வந்தார்கள், மருத்துவக் கல்லூரிக் கனவையே சிதைத்துவிட்டார்கள். பொருளாதாரத் திட்டங்கள் எதுவும் சாமானிய மக்களுக்கு நன்மை செய்வதாக இல்லை.
குடியுரிமைச் சட்டம் கொண்டு வந்து வாழும் மக்களின் நிம்மதியைக் கெடுத்தார்கள். இந்த வரிசையில், இப்போது சூழலியல் சட்டம் கொண்டு வந்து சூழலை மொத்தமாகக் காலி செய்யப் போகிறார்கள்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை என்று சொல்லப்படுகிற சுற்றுச்சூழல் வரைவுச் சட்டமானது எல்லா வகையிலும் மக்களுக்கு எதிரானதாக, இந்தச் சூழலைக் கெடுப்பதாக அமைந்துள்ளது. இன்றைக்கு நாட்டில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகின்றன. புதிய திட்டங்கள் தொடங்கப்படுகின்றன.
இந்தத் திட்டங்களையோ, தொழிற்சாலைகளையோ நாம் எதிர்க்கவில்லை. திட்டங்கள், தொழிற்சாலைகள் மூலமாகக் கிடைக்கும் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், உள்நாட்டு உற்பத்திப் பெருக்கம், வெளிநாட்டு ஏற்றுமதி ஆகிய அனைத்தும் ஏற்க வேண்டியவை தான்.
ஆனால் அப்படி உருவாக்கப்படும் தொழிற்சாலைகள், திட்டங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக இருக்கக் கூடாது. சுற்றுச்சூழலைக் கெடுத்துவிட்டு எந்தத் திட்டத்தையும் கொண்டுவரக் கூடாது. அப்படிச் செய்வது தவறானது.
அப்படிச் செய்வது, ‘விலை கொடுத்துத் துன்பத்தை வாங்குவதாக' அமைந்து விடும். போபால் விஷவாயு கசிவால் கொத்துக்கொத்தாக மனிதர்கள் மரணம் அடைந்ததை நாம் இன்னும் மறக்கவில்லை. 1986-ம் ஆண்டு - சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், அதனால் தான் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டம் 2006-ம் ஆண்டு மேலும் கடுமையாக்கப்பட்டது. சுனாமி வந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்த சோகத்தின் காரணமாக, இனியொரு முறை அப்படி ஆகிவிடக்கூடாது என்பதால் அந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது.
தொழிற்சாலைகள் - திட்டங்கள் தொடங்குவதற்கு முன்னதாக சுற்றுச்சூழல் அனுமதி வாங்க வேண்டும் என்றும் - ஆறு மாதத்துக்கு ஒருமுறை சுற்றுச்சூழல் அறிக்கை தர வேண்டும் என்றும் - பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும் - பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தரலாம் - என்றெல்லாம் 2006-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் இருந்தது. ஆனால் இப்போதைய சட்டத்தில் இவை அனைத்தையும் நீக்கிவிட்டார்கள்.
ஆறு மாதத்துக்கு ஒருமுறை தாக்கல் செய்யவேண்டிய சுற்றுச்சூழல் அறிக்கையை ஆண்டுக்கு ஒருமுறை தாக்கல் செய்தால் போதும் என்றும், ஒரு திட்டத்தையோ தொழிற்சாலையையோ தொடங்கிவிட்டு அதன் பின்னர் கூட அனுமதி வாங்கிக் கொள்ளலாம் என்றும், விதிமீறல் இருக்குமானால் இத்திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே புகார் தர முடியும் என்றும், இப்போது கொண்டு வரப்பட்ட சட்டத்தில் சொல்லி இருக்கிறார்கள். சுற்றுச்சூழலை இதைவிட யாரும் கொச்சைப்படுத்தமுடியாது.
இதற்குப் பதிலாக, சுற்றுச்சூழல் அனுமதிச் சட்டத்தையே மொத்தமாக ரத்து செய்துவிடலாமே? என்பதுதான் என்னுடைய கேள்வி! இப்போது போட்டுள்ள சட்டத்தின்படி சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு யார் அனுமதியும் தேவையில்லை. தஞ்சை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் யாரும் கேள்வி கேட்க முடியாது.
சில மாதங்களுக்கு முன்னால் விசாகப்பட்டினத்தில் தனியார் ஆலையில் ஏற்பட்ட கசிவால் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மயங்கி விழுந்து இறந்த காட்சிகளையும் பார்த்தோம். இதை யாரும் கேள்வி கேட்க முடியாது. இப்படியே போனால் மக்கள் கதி என்ன என்பதுதான் இன்று எழும் கேள்வி.
சுற்றுச்சூழல் தாக்க வரைவுச் சட்டத்தை நாம் ஏன் எதிர்க்கிறோம் என்றால் -
1. இது தனியார்மயமாக்கலுக்கு வழிவகுக்கிறது! இதன் மூலம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசின் குறுக்கீடு இல்லாமல் நமது இயற்கை வளங்களைச் சுரண்டும்!
2. அரசு நிர்வாகத்தின் தலையீடு குறைந்து தனியார் தங்கள் விருப்பம் போல தடையில்லாமல் செயல்படும் நிலை ஏற்படும்.
3. ஏதாவது விதிமீறல்கள் இருந்தால் அதுகுறித்து புகார் கொடுக்க அரசு அதிகாரிகளுக்கும், திட்ட ஆதரவாளர்களுக்கும் மட்டுமே உரிமை உண்டு. பொதுமக்களுக்கு கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் உரிமை பறிக்கப்படுகிறது!
4. எந்தச் சுற்றுச்சூழல் தாக்க வரைவாக இருந்தாலும் அது பொதுமக்கள் கருத்து கேட்புக்கு வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்தத் திட்டம் குறித்த புரிதல் ஏற்படுவதோடு; அதனை ஆராய்ந்து பார்த்தும் முடிவெடுக்க ஏதுவாக இருக்கும்.
5. மாநிலச் சுற்றுச்சூழல் அதிகாரிகளை மத்திய அரசு நியமிப்பது மத்திய அரசே முழு அதிகாரத்தையும் எடுத்துக் கொள்வதாகும். இது மாநில உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கை. சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்து விஷயங்களும் மாநில அரசின் அனுமதி பெற்றே நடக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.
6. இந்தச் சட்டம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக உள்ளது. அதனால் தான் எதிர்க்கிறோம்!
இந்தச் சட்டம் அமலானால் மத்திய - மாநில அரசுகள் கொண்டுவர நினைக்கும் மக்கள் விரோதத் திட்டங்கள் எதையும் நாம் கேள்வி கேட்க முடியாது.
· ஹைட்ரோகார்பன்,
· சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம்,
· மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவது,
· ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம்,
· நியூட்ரினோ போன்றவை குறித்து மக்கள் கேள்வி கேட்க முடியாது.
இந்தத் திட்டங்களுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த மக்களின் போராட்டமும் - தியாகமும் அர்த்தமற்றதாகிவிடும்!
இதுவரை மத்திய அரசு கொண்டு வந்த அனைத்துத் திட்டங்களுக்கு எதிராகவும் மாநில அரசு மவுனமாக இருந்தது. அதேபோலத் தான் இப்போதும் இருக்கிறது.
அ.தி.மு.க. அரசின் இந்தச் செய்கை தவறானது; மக்களுக்கு எதிரானது; நாட்டின் எதிர்காலத்துக்கு எதிரானது.
ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் இச்சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. முற்றிலுமாக எதிர்க்கிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்து கொண்டுவரக்கூடிய திட்டங்களில் சூழல் மீதான தாக்கத்தை ஆய்வு செய்து, சூழலுக்கு கேடு விளைவிக்குமானால் நிச்சயமாக அனுமதிக்கமாட்டோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
எங்கள் கோரிக்கைகள் என்ன என்றால்-
1. நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் சட்டவரைவு வைக்கப்பட்டு இந்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.
2. இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதமாக நமது திட்டங்களை மாற்றியமைத்து மக்களுக்கும், சூழலுக்கும் ஏதுவாக கொள்கைகளை வகுக்க வேண்டும்.
எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கைக்கு எதிரான குரலை, மக்களின் குரலாக ஒலிப்பார்கள் என்ற உறுதியை நான் அளிக்கிறேன்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சூழலைக் காப்போம்! எதிர்காலம் காப்போம்!
நன்றி வணக்கம்!” என அவர் உரையாற்றினார்.