சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பல்வேறு விஷயங்கள் சர்ச்சையாக மாறிவருகிறது. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் ஒன்றை அமைக்க உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.
அதில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலம் பயின்று வருவதாலும், பல்வேறு தரப்பினரும் தற்போது வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் வேலை செய்து வருவதாலும், இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ள அவர், இதுபோன்ற சூழலில் எந்தவித கட்டுப்பாடும் இன்றி யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
குறும்படம் என்ற பெயரில் ஆபாச வீடியோக்கள் அதிகம் பதிவிடப்படுவதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தியாவில் கோடிக்கணக்கான நுகர்வோர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வரும் போதிலும், அங்கு பதிவிடும் வீடியோக்களை தணிக்கை செய்ய அதற்கென எந்தவித தணிக்கை முறையும் இல்லை எனவும், திரைப்படங்களை தணிக்கை செய்ய சென்சார் போர்டு உள்ளதைப் போல சமூக வலைதளங்களை தணிக்கை செய்யவும் தனி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
வீடியோக்களை தணிக்கை செய்ய வாரியம் அமைக்கும் வரை, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரினார். இது முக்கிய வழக்கு என கருத்து தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் மத்திய மற்றும் மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.