மோடி அரசு ஆட்சிக்கு வந்தபிறகு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் வழங்கப்படும் வேலைகள் பெரும்பாலும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது.
குறிப்பாக, திருச்சி ரயில்வேயில் 450 பணியிடங்களில் 435 இடங்கள் முழுக்க முழுக்க வட மாநிலத்தவர்களை நியமனம் செய்து இருக்கிறார்கள். இதேபோன்று பல்வேறு மத்திய அரசு துறைகளில் முக்கிய பணிகளில் வடமாநிலத்தவர்களுக்கு பதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
தொழில்துறையில் முன்னணி மாநிலமாக விளங்கும் தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் வேலைகளில் தமிழத்தைச் சேர்ந்தவர்களையே பணியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த வாரம் தி.மு.க தலைமையில் திருச்சியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டினரின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வரும் ‘தமிழக அரசு வேலை தமிழர்களுக்கே’ என்ற முழக்கம் மீண்டும் வலுப்பெறத் தொடங்கியது. இன்று, தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணியிடங்களை தமிழர்களுக்கு ஒதுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வழியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
மேலும், இன்று நடைபெற்ற போராட்டத்தில் தமிழகத்தில் அரசுப்பணிகளில் வெளி மாநிலத்தவருக்கு முன்னுரிமை வழங்கக்கூடாது. 90 சதவீத பணிகள் தமிழர்களுக்கே வழங்கப்படவேண்டும், டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தமிழர்களுக்கு முழுவாய்ப்பு வழங்கவேண்டும்.
மத்திய அரசு அறிவித்துள்ள ஒரே நாடு, ஒரே தேர்வு முறையை ரத்துசெய்யவேண்டும். தமிழகத்தில் உள்ள சிறு, குறு நடுத்தர தொழிற்சாலைகளில் வெளிமாநில தொழிலாளர்கள் பயன்படுத்துவதை தவிர்த்து தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒருபகுதியாக, அரியலூர் மாவட்டம் அங்கனூரில் வி.சி.க தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாசல் இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதேபோல், சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.