பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் தன்னை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமரவிடாமல் கொலை மிரட்டல் விடுப்பதாக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் அம்மாள் சுதந்திரத்தன்று தேசியக் கொடி ஏற்றவிடாமல் தடுத்த விவகாரம் பரபரப்பைக் கிளப்பியது.
மாவட்ட ஆட்சியர் தலையிட்டு அந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்து ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் அம்மாள் தேசியக்கொடியை ஏற்றினார். இந்நிலையில், மற்றொரு பெண் ஊராட்சி மன்றத் தலைவரின் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் சரிதா. பட்டியலினத்தைச் சேர்ந்தவரான சரிதா, தான் சாதிய பாகுபாட்டுக்கு உள்ளாவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர விடாமல் பாலசுப்பிரமணியம் என்பவர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் அளித்துள்ளார் ஊராட்சி மன்றத் தலைவர் சரிதா.
மேலும், ஊராட்சி எல்லையில் உள்ள தகவல் பலகை, ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் ‘ஊராட்சி மன்றத் தலைவர் சரிதா’ என எழுதவிடாமல் தடுப்பதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவை போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.