ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் யோகாவைப் பரப்புவதற்காக, யோகா படிப்பு முடித்த 1,25 இலட்பேம் பேரை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நியமிக்கத் திட்டமிட்டு உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து 38 மருத்துவர்களின் பெயர் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது.
பயிற்சி வகுப்புகளின் கடைசி நாளில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் கோட்சே கலந்துகொண்டு இந்தியில் பேசியுள்ளார். அப்பொழுது தமிழகத்திலிருந்து கலந்துகொண்ட மருத்துவர்கள், “எங்களுக்கு இந்தி தெரியாது. நீங்கள் பேசுவது புரியவில்லை.
யோகா மற்றும் இயற்கை மருத்துவமுறை என்று இருக்கும்போது, நீங்கள் யோகாவை மட்டும் கூறுகிறீர்கள். இயற்கை மருத்துவத்தை எதிர்க்கிறீர்களா?” என்று ஆன்லைனில் பதிவிட்டுள்ளனர். “ஆங்கிலத்தில் பேசுங்கள்” என்று கூறியுள்ளனர்.
இதனால் கோபம் அடைந்த ராஜேஷ் கோட்சே, “எனக்கு ஆங்கிலம் தெரியாது. இந்தி தெரியவில்லை என்றால், ஆன்லைன் வகுப்பிலிருந்து விலகுங்கள்” என்று கோபமாகப் பேசியதோடு, பயிற்சி வகுப்பையே உடனடியாக இரத்து செய்து, இணைப்பைத் துண்டித்துவிட்டனர்.
தனக்கு எதிராகப் பேசியவர்கள் பெயர் பட்டியலைத் தயார் செய்து, “மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பி வைத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன்” என்று மிரட்டியுள்ளார்.
இதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் எனக்கூறிய ஆயுஷ் அமைச்சக செயலர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கிற்கு எம்.பி. கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடித்ததில், “இந்தி மற்றும் ஆங்கிலம் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ மொழிகள் மற்றும் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் அதிகாரப்பூர்வ மொழிகளாக பட்டியலில் உள்ளன.
மொழிரீதியாக பாகுபாடு காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் ஆங்கிலத்தில் நடத்தப்படுவதை உறுதிசெய்யவேண்டும். மேலும், இந்தி பயன்படுத்தப்படும்போதெல்லாம் ஆங்கிலத்தில் தொடர்புடைய மொழிபெயர்ப்பு அதற்காக வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.