சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவியுடன் சென்னை சூளை பகுதியை சேர்ந்தவர் திலீப் என்பவர் முகநூல் மூலம் அறிமுகமாகி இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
மேலும், பிரவீனின் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டு நல்ல குடும்ப நண்பரைப் போல் பழகி வந்திருக்கிறார் திலீப். அதன்பின்னர் பிரவீனின் மனைவி நடத்திவரும் துணிக்கடைக்கு அடிக்கடிச் சென்று கடந்த ஒரு வருடமாக நல்ல பழக்கத்தில் இருந்துள்ளனர்.
பின்னர் பிரவீனின் மனையிடம், ஆப்பிள் ஐபோன்களை வெளிநாடுகளில் இருந்து வாங்கிவந்து சென்னையில் விற்பனை செய்யப்போவதாகவும். அந்த தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் நாம் இருவரும் சேர்ந்து செய்யலாம் என கூறியிருக்கிறார் திலீப். மேலும் தொழில் தொடங்குவதற்காக 2.75 லட்சம் ரூபாயை பிரவீனின் மனைவியிடம் வாங்கி இருக்கிறார் திலீப்.
திலீப் பணம் வாங்கிச் சென்ற பின்னர் பிரவீனின் மனைவியிடம் பேசுவதை தவிர்த்து வந்திருக்கிறார் ]. இதனால் சந்தேகமடைந்த பிரவீன் தொலைப்பேசி மூலம் திலீப்பை தொடர்புக்கொண்டு பணத்தை கராராக கேட்டிருக்கிறார். இந்த நிலையில் பணத்தை வாங்கிய திலீப் தலைமறைவாகிருக்கிறார்.
உடனடியாக இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதம் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலிஸார் திலீப்பை தேடிவந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த திலீப் தனது வீட்டிற்கு வர இருப்பதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் சம்பவத்தன்று திலீப்பை அவரது வீட்டில் வைத்து போலிஸார் கைது செய்தனர்.
திலீப்பை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலிஸார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே திலீப் மீது சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், குடும்பப் பெண்களை குறிவைத்து சமூக வலைதளம் மூலமாக அவர்களிடம் பேசி குடும்ப நண்பரைப் போல நெருங்கிப் பழகி பல பெண்களை ஏமாற்றியது அம்பலமாகியிருக்கிறது.
இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு திருவல்லிக்கேணியை சேர்ந்த டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் ரவீந்திரன் என்பவரின் அண்ணியிடம் சமூக வலைத்தளம் மூலம் பேசி, குடும்ப நண்பர் போல் பழகி வீட்டிற்கு தினமும் சென்று திலீப் பேசி வந்திருக்கிறார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட திலீப், அவர் வீட்டில் இருந்த 30 சவரன் நகையை திருடிக் கொண்டு தலைமறைவாகி இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுமட்டுமல்லாது வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கிக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதற்காக இவர் விமான பயிற்சி நிறுவனத்தில் மாணவராக சேர்ந்து, அங்கே பலருடன் நட்பாக பழகி உள்ளார். பின்னர் பயிற்சி முடிந்தவுடன் நட்பாக பழகிய 6 பேரிடம் ஏர்லைன்ஸில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒவ்வொருவரிடமும் சுமார் 60 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை வசூல் செய்து வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.
இதில் திலீப்பிடம் ஏமார்ந்தவர்கள் அமைந்தகரை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். மேலும் இதே போல் பெரியமேட்டில் உள்ள ஒரு பெண்ணிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒருவரிடம் மோசடி செய்துவிட்டு அந்த பணத்தை வைத்து திலீப் வெளிநாட்டிற்குச் சென்று உல்லாசமாக இருந்துவிட்டு மீண்டும் சென்னைக்கு வந்து மோசடி ஈடுபடுவதை வழக்கமாக வைத்தள்ளார். அப்படியே ஒருவேளை காவல்துறையினரிடம் சிக்கினாலும், கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை திரும்ப தருவதாகக் கூறி நம்ப வைத்து பின்னர் மீண்டும் தலைமறைவாகி இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் திலீப் கைதான விஷயத்தை அறிந்து கொண்டு அவரால் பாதிக்கப்பட்ட பெண் உட்பட பலரும் வேப்பேரி காவல் நிலையத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் திலீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.