தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மாவட்ட திட்ட பணிகள் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதுபோன்ற, அரசு நடந்தும் விழாக்கள் மற்றும் கூட்டங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் கலந்துக்கொள்வது வழக்கம்.
ஆனால் தமிழக அரசு நடத்தும் அனைத்துக் கூட்டங்களிலும் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு ஆளும் கட்சி எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் பிற்பகல் 4 மணி அளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், கலந்து கொள்வதற்காக தருமபுரி தி.மு.க எம்.பி. செந்தில்குமார் ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்தார்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலிஸார் முதல்வரின் நிகழ்ச்சிக்கு அனுமதிக்க முடியாது; தங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துவிட்டு அதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கலாம் என கூறியுள்ளனர்.
அ.தி.மு.க அரசு தொடர்ந்து தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை திட்டமிட்டு புறக்கணிப்பதற்காக குற்றம் சாட்டி, தமிழக முதல்வர் கலந்துகொள்ளக்கூடிய, அதுவும் தன்னுடைய மாவட்டத்தில் நடக்கக்கூடிய கூட்டத்தில் தான் கலந்து கொள்ள வேண்டும்.
தருமபுரி மாவட்ட எம்.பி.யாக இருக்கிறேன், மக்களின் பிரச்சனைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன். என்னை அனுமதிக்க வேண்டும் என்றும் போலிஸாரிடம் தருமபுரி தி.மு.க எம்.பி. தொடர்ந்து கோரிக்கை வைத்தார்.
ஆனால், அதனை போலிஸார் ஏற்க மறுத்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.செந்தில்குமாரை போலிஸார் அப்புறப்படுத்த முயன்று அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த சம்பவத்திற்கு தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க அலுவலகத்தில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “தமிழக அரசு நடத்திய ஆய்வு கூட்டத்தில், தி.மு.க சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை புறக்கணித்து, அரசு ஆய்வு கூட்டம் என்ற பெயரில் அ.தி.மு.க செயல்வீரர் கூட்டம் நடத்தி உள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடத்திய அரசு ஆய்வு கூட்டம் ஜனநாயகமற்ற ஒரு செயலாகும்” எனத் தெரிவித்தார். மேலும், பலரும் அரசின் இத்தகைய அனுமுறைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.