கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களை கட்டணம் செலுத்த நிர்ப்பந்திக்கக் கூடாது என கடந்த ஏப்ரல் மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் விவகாரங்களுக்கான மையம் அறிவுறுத்திய நிலையில், தற்போது கட்டணம் செலுத்த நிர்பந்தம் செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கு சூழலில், 2020-2021 ம் கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணமோ, 2019-2020 கல்வி ஆண்டுக்கான பாக்கி கட்டணமோ செலுத்துமாறு மாணவர்களையோ, அவர்களது பெற்றோர்களையோ கட்டாயப்படுத்தக் கூடாது என அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் விவகாரங்களுக்கான மையம் கடந்த ஏப்ரல் மாதமே அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கட்டணம் செலுத்த தாமதமானால் அபராதக் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதம் என்றும், இந்த உத்தரவை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்கள் அனைத்து வகையான கட்டணமும் செலுத்த உத்தரவிட்டிருப்பதோடு, நடைபெறாமல் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே தேர்வு முடிவுகள் வெளிவரும் எனவும் அராஜகம் செய்து வருகிறது.
நடத்தப்படாத தேர்வுக்கு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. பதிவு எண்ணை உள்ளீடு செய்தால் தேர்வுக் கட்டணம் செலுத்தாததற்கான குறியீடே காட்டப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இத்தகைய அராஜகப் போக்கால் தற்போது லட்சக்கணக்கான பொறியியல் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவை அறிந்துகொள்ள முடியாமல் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு, மாணவர்களின் எதிர்காலத்தைக் காத்திட வேண்டும் என்பதே லட்சக்கணக்கான பொறியியல் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.