விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கக் கோரி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா.அருணன் மற்றும் க.உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், “கொரானா காலத்தில் நோய் பரவாமல் தடுக்க, தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டிற்குள்ளேயே கொண்டாடிட வேண்டுமெனவும், பொது இடங்களில் சிலை வைப்பது ஊர்வலம் செல்வது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அனைவராலும் வரவேற்கக் கூடியது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் தமிழக அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம் .
அதே நேரத்தில் மாநில அரசு ஒரு நல்ல நோக்கத்துடன் கொண்டுவந்துள்ள இந்த தடையை மீறப் போவதாகவும் தமிழகத்தில் ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகளை வைத்து விழா கொண்டாட போவதாகவும் இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் அறிவித்துள்ளார். இவ்வாறு செய்வது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கி ஒரு பதட்ட நிலையை ஏற்படுத்தும். கொரோனா காலத்தில் மக்கள் கூடுவது தொற்றை அதிகரிக்கும் என்ற நல்ல நோக்கத்துடன்தான் தமிழக அரசு இந்த தடையை கொண்டு வந்துள்ளது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக மக்கள் முழு ஆதரவு தர வேண்டும் என்றும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழகத்தில் கலவரங்களை உருவாக்கும் வகையில் இந்து முன்னணி என்ற தீவிரவாத அமைப்பு தடையை மீறி விழா நடத்தப் போவதாக அறிவித்துள்ள நிலைபாட்டினை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றும் இத்தகைய அமைப்புகளின் அறைகூவலை புறக்கணித்து அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை வீட்டுக்குள்ளேயே கொண்டாட வேண்டுமென மக்கள் ஒற்றுமை மேடை தமிழக மக்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறது.
தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் அமைப்பு மீது தமிழக அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டிட வேண்டும் என்று மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் சி.பி.ஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கொரோனா தொற்று காரணமாக சுதந்திர தின கொண்டாட்டங்களே கட்டுபாட்டுடன் நடக்கின்றன. இதே காரணத்திற்காகத்தான் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவும், ஊர்வலம் செல்லவும் தமிழக அரசு தடை செய்துள்ளது. உலகம் முழுவதுமே வழிபாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் தடையை மீறுவோம் என்றும், பொது இடங்களில் லட்சம் விநாயகர் சிலைகள் வைப்போம் என்றும் இந்து முன்னணி செய்துள்ள அறிவிப்பு ஆன்மீகம் அல்ல, கடைந்தெடுத்த மதவெறி அரசியலே. இச்செயல் வன்மையாக கண்டனத்திற்குரியது” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் இதே கருத்தை வலியுறுத்தி வருகின்றனர்.