தமிழ்நாட்டிலிருந்து ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற நான்கு இளைஞர்கள் அங்கு ஒரு நதியில் குளிக்கும்போது மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த நான்கு இளைஞர்களும் தாராபுரம், திருப்பூர், கடலூர் மற்றும் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
தமிழ்நாட்டிலிருந்து ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற முகமது ஆஷிக், மனோஜ் ஆனந்த், ஆர்.விக்னேஷ் மற்றும் ஸ்டீபன் உள்ளிட்டவர்கள் அங்கு வோல்காகிராட் அரசு மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்தனர். அவர்கள் நால்வரும் வோல்கா நதியில் குளிக்கச் சென்றபோது மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
”எங்கள் மகனை ஒரு மருத்துவராகப் பார்க்கவேண்டும் என்பது எங்களுடைய மிகப் பெரிய கனவு. அவனும் மருத்துவராக வேண்டும் என்று பெரும் கனவிலிருந்தான். சிறு வயதிலிருந்தே அவன் ஒரு மருத்துவராக வேண்டும் எனக் கனவு கண்டான்.” என முகமது ஆஷிக்கின் தந்தை முகமது ரஃபி தெரிவித்துள்ளார்.
அவனுடைய படிப்பை முடித்துவிட்டு ஆறு மாதத்தில் வீடு திரும்பிவிடுவான் என நாங்கள் எண்ணிக்கொண்டிருந்தோம் எனவும் ரஃபி தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களின் குடும்பத்துக்குத் தெரிவிக்கப்பட்ட தகவலின் படி, மொத்தம் 10 மாணவர்கள் வார இறுதி நாட்களைக் கொண்டாட வோல்கா நதிக்குக் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அதில் 6 மாணவர்கள் நீந்தி உயிர் பிழைக்க மீதம் உள்ள நால்வரும் உயிரிழந்துள்ளனர். மற்ற மூவரை காப்பாற்றச் சென்ற விக்னேஷும் பலியாகியுள்ளார்.
இந்த நால்வரின் சடலங்களும் இன்னும் நதியிலிருந்து மீட்கப்படவில்லை. இறந்த மாணவர்களின் பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளின் சடலங்களை மீட்க வேண்டும் என அரசிடம் வேண்டியுள்ளனர்.