நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்த மூன்று மாவட்டங்களிலும் அதீத கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களைப் பொறுத்தவரை இரண்டு நாட்களாகத் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, மரம் பெயர்ந்து விழுதல் உள்ளிட்டவை நடந்துள்ளன. மேலும் பயிர்களும் சேதமடைந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 900 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடையும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். வியாழன் அன்று நீலகிரி மாவட்டத்தில் 111 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. அதுவே புதன் அன்று 77மிமீ மழைப் பதிவாகியுள்ளது. அவலான்சியில் 581 மிமீ மழையும் மேல் பவானி மற்றும் கூடலூரில் 319மிமீ மற்றும் 335 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
இந்த புகுதிகளில் பல்வேறு மரங்கள் மழையால் வேரோடு பெயர்ந்து விழுந்துள்ளன. அதேபோல் குன்னூர், கோத்தகிரியில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 8-ம் தேதி மிகக் கனமழை பெய்ய இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் பகுதியில் பல்வேறு இடங்களில் வாழை மற்றும் வெங்காய பயிர்கள் மழையால் கடுமையாக சேதமடைந்துள்ளது.
மேலும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் மிக கன மழை பெய்யக்கூடும் எனவும், சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.